தமிழக செய்திகள்

விழுப்புரத்தில் கோர விபத்து: அடுத்தடுத்து மோதிக்கொண்ட வாகனங்கள் - 2 பேர் பலி

மோட்டார் சைக்கிளில் சென்ற லாசரும், பூபதியும் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தனர்.

விழுப்புரம் மாவட்டம் பிடாகம் கிராமத்தை சேர்ந்தவர் லாசர்(வயது26).

விபத்து

இவர் இன்று அதிகாலை தனது மோட்டார் சைக்கிளில் சென்னை முத்தோப்பு நரசிங்கபுரத்தை சேர்ந்த பூபதி(45) என்பவருடன் திண்டிவனத்தில் இருந்து விழுப்புரம் நோக்கி வந்து கொண்டிருந்தார்.

இவர்களது மோட்டார் சைக்கிள் விழுப்புரம் அருகே அய்யூர் அகரம் ரெயில்வே மேம்பாலத்தில் வந்து கொண்டிருந்தது.

அப்போது இவர்களுக்கு பின்னால் வந்த வாகனம் ஒன்று திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டு நிற்காமல் வேகமாக சென்று விட்டது.

சொகுசு பஸ்

இதில் மோட்டார் சைக்கிளில் சென்ற லாசரும், பூபதியும் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தனர். அப்போது பின்னால் சென்னையில் இருந்து கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நோக்கி சொகுசு பஸ் ஒன்று வந்தது. இந்த பஸ்சை ராணிப்பட்டையே சேர்ந்த டிரைவர் சரவணன் இயக்கி வந்தார்.

அவர் விபத்தில் சிக்கி இளைஞர்கள் சாலையில் கீழே விழுந்து கிடப்பதை பார்த்ததும் அவர்கள் மீது மோதாமல் இருக்க பஸ்சை பிரேக் போட்டு நிறுத்த முயன்றார். ஆனால் அதற்குள்ளாகவே பஸ் சாலையில் விழுந்து கிடந்த பூபதியின் மீது ஏறிவிட்டது.

வாலிபரின் மீது ஏறியது

இதில் பூபதி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். லாசர் படுகாயங்களுடன் உயிருக்கு போராடி கொண்டிருந்தார்.

விபத்து நிகழ்ந்ததும், சொகுசு பஸ்சை டிரைவர் நிறுத்தி விட்டார். அப்போது சொகுசு பஸ்சின் பின்னால் வந்த காரும், அதன்பின்னால் வந்த டெம்போ டிராவலரும் அடுத்தடுத்து வந்து பஸ்சின் மீது மோதி விபத்தில் சிக்கி கொண்டன.

இதில் காரின் முன்பகுதி முழுவதும் சொகுசு பஸ்சின் அடியில் சிக்கி அப்பளம் போல் நொறுங்கியது.

அடுத்தடுத்து விபத்தில் சிக்கிய வாகனங்கள்

அதிகாலை நேரத்தில் அடுத்தடுத்து நடந்த இந்த விபத்தில் காரில் பயணித்த சென்னை முடிச்சூரை சேர்ந்த ஜான் அன்பழகன்(வயது50) என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவருடன் காரில் வந்த சாலமன்(55), டிரைவர் பாலாஜி ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர்.

இந்த விபத்து குறித்து அறிந்ததும் விழுப்புரம் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் விபத்தில் சிக்கி காயம் அடைந்த லாசர், சாலமன், டிரைவர் பாலாஜி ஆகிய 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவர்கள் அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

2 பேர் உயிரிழப்பு

உயிரிழந்த ஜான் அன்பழகன், பூபதி ஆகியோரின் உடல்களை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து சொகுசு பஸ்சின் அடியில் சிக்கிய காரை மீட்கும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். நீண்ட போராட்டத்திற்கு பிறகு விபத்தில் சிக்கிய கார், மோட்டார் சைக்கிள், டெம்போ டிராவலர் உள்ளிட்ட வாகனங்கள் மீட்கப்பட்டன.

இந்த விபத்தால் சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

போலீசார் விசாரணை

இந்த சம்பவம் குறித்து விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்து ஏற்பட்டது எப்படி, மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்ற வாகனம் எது? அதனை ஓட்டி வந்தவர் யார்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகாலை நேரத்தில் நடந்த இந்த கோர விபத்து அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.