தமிழக செய்திகள்

சென்னை போலீஸ் கமிஷனராக அபின் தினேஷ் மோடக் நியமனம்

புதிய டி.ஜி.பி.யாக சந்தீப்ராய் ரத்தோர் பதவியேற்று பணியாற்றி வருகிறார்.

சென்னை போலீஸ் கமிஷனராக பணியாற்றிய அருண் மாற்றப்பட்டார். அவருக்கு பதிலாக புதிய கமிஷனராக அபின் தினேஷ் மோடக் நியமிக்கப்பட்டார். அவர் உடனடியாக பதவியேற்றுக்கொண்டார்.

தமிழக சட்டசபை தேர்தலையொட்டி ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் அதிரடியாக மாற்றப்பட்டு வருகிறார்கள். தலைமைச் செயலாளர் முருகானந்தம் மாற்றப்பட்டு, புதிய தலைமைச் செயலாளராக சாய் குமார் பொறுப்பேற்றுள்ளார்.

பொறுப்பு டி.ஜி.பி.யாக இருந்த வெங்கடராமன் மாற்றப்பட்டார். புதிய டி.ஜி.பி.யாக சந்தீப்ராய் ரத்தோர் பதவியேற்று பணியாற்றி வருகிறார். லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனர் டேவிட்சன் தேவாசீர்வாதம் மாற்றப்பட்டார். புதிய இயக்குனராக சந்தீப் மிட்டல் பதவியேற்றுள்ளார்.

மதுரை போலீஸ் கமிஷனரும், தாம்பரம் போலீஸ் கமிஷனரும் மாற்றப்பட்டுள்ளனர். மேற்கு மண்டல ஐ.ஜி.யும் மாற்றப்பட்டுள்ளார். 8 மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் பணி மாறுதல் செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் நேற்று இரவு சென்னை போலீஸ் கமிஷனர் அருண் மாற்றப்பட்டார். அவருக்கு புதிய பதவி எதுவும் வழங்கப்படவில்லை. அவருக்கு பதிலாக, சென்னையின் புதிய போலீஸ் கமிஷனராக அபின் தினேஷ் மோடக் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் அமலாக்கத்துறை கூடுதல் டி.ஜி.பி.யாக பணியாற்றி வந்தார் மற்றும் தாம்பரம் போலீஸ் கமிஷனராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று இரவு 9 மணியளவில் அபின் தினேஷ் மோடக் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்து பதவியேற்றுக்கொண்டார்.

அபின் தினேஷ் மோடக் மராட்டிய மாநிலம் நாக்பூரை சேர்ந்தவர். மெக்கானிக் என்ஜினீயரிங் படித்த இவர், 1997-ம் ஆண்டு தமிழக காவல்துறையில் ஐ.பி.எஸ். அதிகாரியாக பணியில் சேர்ந்தார். தாம்பரம் கமிஷனராக பணியாற்றியபோது, இவர் நேர்மையாக பணியாற்றியவர் என்ற பாராட்டை பெற்றுள்ளார்.

புதிய போலீஸ் கமிஷனர் அபின் தினேஷ் மோடக்கிற்கு மனைவியும், ஒரு மகள், மகன் உள்ளனர். இவரது மகள் டென்னிஸ் விளையாட்டு வீராங்கனையாக உள்ளார். மகன் பிளஸ்-2 படிக்கிறார். இவரது சகோதரர் மராட்டிய மாநிலத்தில் ஐ.பி.எஸ். அதிகாரியாக உள்ளார்.