தமிழக செய்திகள்

ஆடிப்பெருக்கு விழா - மக்கள் வசதிக்காக படித்துறையில் 'ஷவர்கள்' அமைப்பு

ஆடிப்பெருக்கு நாளில் சுமங்கலி பெண்கள் தங்களது தாலி பாக்கியம் நிலைப்பதற்காக காவிரி தாய்க்கு சிறப்பு பூஜை நடத்தி வழிபாடு செய்வார்கள்.

ஆடிப்பெருக்கு விழா

தமிழர்களின் பாரம்பரிய விழாக்களில் ஒன்று ஆடிப்பெருக்கு. ஆடி மாதம் 18-ந்தேதி காவிரி கரையோர மாவட்டங்களில் இந்த விழா ஆண்டாண்டு காலமாக கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

அகண்ட காவிரி பாயும் திருச்சி அம்மா மண்டபம் படித்துறையில் ஆடிப்பெருக்கு விழா களைகட்டும்.

கடந்த ஆண்டு அம்மா மண்டபத்தின் 12 படிக்கட்டுகளையும் தொட்டபடி காவிரி புதுப்புனலாக பாய்ந்து சென்றது. இதன் காரணமாக காவிரியில் புனித நீராடி மக்கள் ஆடிப்பெருக்கு விழாவை சிறப்பாக கொண்டாடினார்கள்.

வறண்ட காவிரி

ஆனால் இந்த ஆண்டுபருவமழை பொய்த்தது மற்றும் கர்நாடகத்தில் இருந்து காவிரி நீர் திறந்து விடப்படாததால் காவிரி ஆறு வறண்ட நிலையில் காணப்படுகிறது. நீர்மட்டம் மிகவும் குறைவாக இருப்பதால் மேட்டூர் அணையில் இருந்து கடந்த ஜூன் மாதம் 12-ந்தேதி குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறந்து விடப்படவில்லை. இதனால் குறுவை சாகுபடி பணிகள் பாதிக்கப்பட்டு இருப்பதுடன், ஆடிப்பெருக்கு விழாவையும் மக்கள் கடந்த ஆண்டைப்போல் கொண்டாட முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.

காவிரி தாய்க்கு சிறப்பு பூஜை

ஆனாலும் ஆடிப்பெருக்கு நாளன்று சுமங்கலி பெண்கள் தங்களது தாலி பாக்கியம் நிலைப்பதற்காக காவிரி தாய்க்கு சிறப்பு பூஜை நடத்தி வழிபாடு செய்வார்கள். புதுமண தம்பதிகள் திருமணத்தின்போது அணிந்திருந்த மாலைகளை காவிரி ஆற்றில் விட்டு, புனித நீராடி வழிபாடு செய்வது உண்டு. காவிரியில் தண்ணீர் இல்லாததால் புனித நீராடுவதில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

குளிப்பதற்கு ஏற்பாடு

காவிரி ஆற்றின் நடுப்பகுதியில் சாக்கடை போல் தண்ணீர் சிறிதளவே தேங்கி நிற்கிறது.

இதன் காரணமாக அம்மா மண்டபம் படித்துறையில் மாநகராட்சி சார்பில் தண்ணீர் குழாயில் அமைக்கப்பட்டுள்ள ஷவரில் பக்தர்கள் குளிப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. பக்தர்களின் வசதிக்காக அம்மா மண்டபம் படித்துறை பகுதியில் சவுக்கு கட்டைகளால் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது.

போலீசார் பாதுகாப்பு

ஆடிப்பெருக்கு விழாவின்போது மக்கள் அதிக அளவில் கூடும்போது கூட்ட நெரிசலை சமாளிப்பதற்காக 600 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் காவிரி ஆற்றுக்குள் தற்காலிக கண்காணிப்பு கோபுரம் ஒன்றும் அமைக்கப்பட்டு உள்ளது.

தஞ்சை மாவட்டம் திருவையாறிலும் காவிரி ஆற்றில் மக்கள் புனித நீராட வசதியாக பம்பு செட் அமைக்கப்பட்டுள்ளன.

ஷவர் அமைப்பு

இதேபோல் கடந்த 2019-ம் ஆண்டு காவிரி ஆற்றில் தண்ணீரின்றி ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்பட்டது. அப்போது பக்தர்கள் குளிக்க வசதியாக 'ஷவர்' அமைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் 2020, 2021, 2022, 2023, 2024, 2025-ம் ஆண்டுகளில் காவிரி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால், ஆடிப்பெருக்கு விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

தற்போது 6 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தண்ணீர் இல்லாமல் இன்று ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்படுவது குறிப்பிடத்தக்கது.