தமிழக செய்திகள்

‘அண்ணன் சீர் திட்டம்’: ஆதார் கட்டாயம் - தமிழக அரசு உத்தரவு!

கருவிழிப் பதிவு அல்லது முக அங்கீகாரம் மூலம் சரிபார்க்கும் வசதிகளை ஏற்படுத்த அரசு அறிவுறுத்தியுள்ளது.

தமிழக அரசின் சமூக நல இயக்குநரகம் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் ‘அண்ணன் சீர் திட்டத்தின்’ கீழ் பயன்பெற விரும்பும் பெண்கள், இனி ஆதார் எண் வைத்திருப்பது கட்டாயம் என்று தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிப்பதற்கான புதிய தகுதி விதிமுறைகள் மற்றும் மாற்று ஆவணங்கள் குறித்த விவரங்களையும் அரசு வெளியிட்டுள்ளது.

ஏழைப் பெண்களின் திருமண தகுதிக்காக, நிர்ணயிக்கப்பட்ட தகுதிகளைப் பூர்த்தி செய்யும் பெண்களுக்கு இத்திட்டத்தின் கீழ் திருமணத்தின்போது 8 கிராம் எடையுள்ள (1 சவரன்) 22 காரட் தங்க நாணயமும், ஒரு பட்டுப்புடவையும் வழங்கப்பட்டு வருகிறது.

ஆதார் அங்கீகாரம் முக்கியம்

புதிய உத்தரவின்படி, இத்திட்டத்தின் மூலம் பயன்பெற விரும்பும் பெண்கள் தங்களது ஆதார் எண்ணுக்கான சான்றைச் சமர்ப்பிக்க வேண்டும் அல்லது ஆதார் அங்கீகார நடைமுறையை நிறைவு செய்ய வேண்டும். இதுவரை ஆதார் அட்டை இல்லாத பெண்கள், திட்டத்தில் பதிவு செய்வதற்கு முன்பாக உடனடியாக ஆதார் பதிவுக்கு விண்ணப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பெண்கள் ஆதார் பெறுவதில் சிரமம் ஏற்பட்டால், அவர்களுக்கு வசதியான இடங்களில் சிறப்பு ஆதார் பதிவு முகாம்களை அமைக்க சம்பந்தப்பட்ட துறைக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.

ஆதார் இல்லாதவர்களுக்கான மாற்று ஆவணங்கள்

ஆதார் எண்ணுக்கு விண்ணப்பித்தும் இன்னும் எண் ஒதுக்கப்படாத நிலையில் உள்ளவர்கள், தங்களது ஆதார் பதிவு அடையாளச் சீட்டுடன், குடும்ப அட்டை மற்றும் வாக்காளர் அடையாள அட்டை, புகைப்படத்துடன் கூடிய வங்கி அல்லது அஞ்சலகக் கணக்குப் புத்தகம், பான் கார்டு, பாஸ்போர்ட் அல்லது ஓட்டுநர் உரிமம், 100 நாள் வேலை உறுதித் திட்ட அட்டை, புகைப்படத்துடன் கூடிய கிசான் கணக்குப் புத்தகம், வட்டாட்சியர் அல்லது அரசு அதிகாரி வழங்கிய புகைப்பட அடையாளச் சான்றுகளில் ஏதேனும் ஒன்றை மாற்று அடையாள ஆவணமாகச் சமர்ப்பிக்கலாம்.

கைரேகை பதிவாகவில்லை எனில் மாற்று வழிமுறை

கைரேகையின் தரம் குறைவாக இருப்பதன் காரணமாக ஆதார் அங்கீகாரம் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டால், பயனாளிகளுக்குப் பயன்கள் மறுக்கப்படக் கூடாது என்பதில் அரசு உறுதியாக உள்ளது. இதற்காக கருவிழிப் பதிவு அல்லது முக அங்கீகாரம் மூலம் சரிபார்க்கும் வசதிகளை ஏற்படுத்த அரசு அறிவுறுத்தியுள்ளது.

இந்த முறைகளிலும் அங்கீகாரம் பெற முடியாத சூழலில், ஆதார் கடிதத்தில் உள்ள QR Code சரிபார்த்து திட்டத்தின் பயன்களை வழங்கலாம் என்றும், அனைத்து நடைமுறைகளும் தோல்வியடைந்தால் மத்திய அரசின் விதிவிலக்கு கையாளுதல் வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்றும் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT