த.வெ.க. தலைவர் விஜய் பெரம்பூர் தொகுதியில் போட்டியிடுகிறார். இந்த தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்த விஜய் தொடர்ந்து பிரசாரத்தில் ஈடுபட்டார்.
விஜய்யை பார்க்க பெரும் கூட்டம் திரண்டதால் பெரம்பூர் பகுதியே ஸ்தம்பித்து போனது. அதன்பிறகு, தமிழகத்தின் மற்ற பகுதிகளில் விஜய் பிரசாரம் மேற்கொண்டார். சென்னையில் நேற்று முன்தினம் த.வெ.க. தேர்தல் அறிக்கையும் வெளியிட்டார்.
இந்த நிகழ்வில் பேசிய விஜய், எல்லோரும் தங்கள் வீடுகள் முன்பு விசில் கோலத்தை போட்டு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அவரின் வேண்டுகோள்படி தமிழகம் முழுவதும் த.வெ.க. தொண்டர்கள் நேற்று தங்கள் வீடுகள் முன்பு விசில் கோலத்தை போட்டனர்.
அதனை சமூக வலைத்தளங்களிலும் அவர்கள் பதிவிட்டு, மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இந்தநிலையில், த.வெ.க. தலைவர் விஜய் நேற்று மாலை திடீரென்று தான் போட்டியிடும் பெரம்பூர் தொகுதிக்கு சென்றார். கொடுங்கையூர், எம்.கே.பி.நகரில் உள்ள த.வெ.க. பணிமனைக்கு சென்றார். அவரின் வருகையை எதிர்பாராத நிர்வாகிகள் இன்ப அதிர்ச்சி அடைந்தனர்.
அவர்களை தோளில் தட்டிக்கொடுத்து தேர்தல் பணிமனைக்குள் சென்ற விஜய் உற்சாகமாக விசில் ஊதினார்.
தொடர்ந்து, பணிமனையை சுற்றிப்பார்த்த விஜய், த.வெ.க. பெண் தொண்டர்களுடன் இணைந்து, பணிமனை முன்பு விசில் கோலம் போட்டார். விஜய்யின் வருகையால் அந்த இடம் முழுவதும் மகிழ்ச்சியில் திளைத்தது.
அதற்குள் விஜய் வருகை குறித்து தகவல் அறிந்ததும் அங்கு பெரும் கூட்டம் கூடிவிட்டது. அவர்களிடம் விஜய் கைக்கூப்பி வாக்கு சேகரித்தார். அவர்களிடம் குறைகளையும் கேட்டறிந்தார். நிர்வாகிகளிடம், 'கொஞ்ச நாள்தான் இருக்கிறது. பணிகளை விரைவுபடுத்துங்கள்' என்று உற்சாகமூட்டினார்.
சிறிது நேரம் அங்கிருந்த விஜய் பின்னர் அங்கிருந்து காரில் ஏறி புறப்பட்டு சென்றார்.
விஜய்யின் திடீர் வருகை ஏன்? என்பது குறித்து த.வெ.க. நிர்வாகிகள் கூறும்போது,"பெருங்கூட்டம் திரண்டு விடக்கூடாது என்பதற்காக யாரிடமும் சொல்லாமல் விஜய் வந்தார். இது எங்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது. எங்களுடன் அவர் கலந்துரையாடினார்" என்றனர்.