தருமபுரியில் செலவுக்குப் பணம் தர மறுத்ததால், கஞ்சா போதையில் பெற்ற தாயையே அடித்துக் கொலை செய்த இளைஞர் கைது செய்யப்பட்டிருப்பதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த வேதனையை ஏற்படுத்துகிறது.
தருமபுரி அருகே கஞ்சா போதையில் பெற்ற தாயையே அடித்துக் கொலை செய்த மகன் – போதையில்லாத் தமிழகத்தை உருவாக்கப்போவதாகக் கூறிய 'தூய சக்தி', தமிழகத்தை "போதையில் புதையும்" சக்தியாக மாற்றி வருவதுதான் மிச்சம் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது சமூகவலைதள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது
தருமபுரியில் செலவுக்குப் பணம் தர மறுத்ததால், கஞ்சா போதையில் பெற்ற தாயையே அடித்துக் கொலை செய்த இளைஞர் கைது செய்யப்பட்டிருப்பதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த வேதனையை ஏற்படுத்துகிறது.
கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் இளைஞர்களின் எதிர்காலத்தை மட்டுமல்லாமல், சமூகத்தின் அமைதியையும் சட்டம் ஒழுங்கையும் அடியோடு சீர்குலைத்து வருவதோடு போதைப் பழக்கத்திற்கு அடிமையாகும் இளைஞர்கள் பணத்திற்காகக் கொலை, கொள்ளை, வழிப்பறி, திருட்டு, தாக்குதல் உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடுவதும், பொது இடங்களில் அச்சுறுத்தும் வகையில் ரகளையில் ஈடுபடுவதும் வாடிக்கையாகிவருகிறது.
மாவட்டந்தோறும் போதைப் பொருள் தடுப்புப் படை அமைத்ததாகக் கூறிய தூயசக்தி, கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் மொத்த விற்பனையாளர்களையும், கடத்தல் பின்னணியில் செயல்படுவோரையும் தனது கட்சியிலேயே வைத்துக்கொண்டு, ஒருபுறம் போதை ஒழிப்பு குறித்து மேடைகளில் பேசுவதும், மறுபுறம் இளைஞர்களின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கும் போதைப் பொருட்களின் புழக்கத்தைக் கட்டுப்படுத்தத் தவறுவதும்தான் அவ்வப்போது பெருமையாகக் கூறிக்கொள்ளும் 'வெள்ளாவியில் வைத்துத் துவைக்கப்பட்ட தூய சக்தியின்' உண்மையான செயல்பாடா?
ஆட்சிப் பொறுப்பேற்று 5 மாதங்களைக் கடந்த பின்னரும், போதைப் பொருள் கடத்தலில் ஈடுபடுவோரையும், அவர்களுக்குப் பின்னணியில் இருந்து செயல்படும் முக்கியப் புள்ளிகளையும் கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்காமல், அத்தகைய குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானவர்களுக்கே கட்சியில் பொறுப்புகளை வழங்கி அழகுபார்ப்பதன் விளைவாகவே போதைப் பொருட்களின் புழக்கமும், அதனால் ஏற்படும் குற்றச் சம்பவங்களும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன என்ற குற்றச்சாட்டுக்கு முதலமைச்சர் என்ன பதில் சொல்லப் போகிறார்?
போதைப்பொருள் புழக்கத்தை முழுமையாகக் கட்டுப்படுத்தி, சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டிய காவல்துறையை, அரசின் தவறான செயல்பாடுகளையும், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற மறுப்பதையும் சுட்டிக்காட்டி, அதன் போலி முகத்திரையை ஜனநாயக ரீதியில் கிழித்தெறிந்து வருபவர்களைக் கண்காணிக்கவும், அவர்களை அச்சுறுத்தவும் ஏவல்துறையாகப் பயன்படுத்தி வரும் தூய சக்தி, தனது அணுகுமுறையை மாற்றிக்கொண்டு, காவல்துறையை எவ்வித அரசியல் தலையீடுமின்றி போதைப்பொருள் ஒழிப்புப் பணியில் சுதந்திரமாகச் செயல்பட அனுமதித்திருந்தால், கடந்த ஐந்து மாதங்களில் தமிழகத்தில் இத்தனை குற்றச் சம்பவங்கள் அரங்கேறியிருக்க வாய்ப்பில்லை.
எனவே, பல கோடி ரூபாய் செலவு செய்து ரீல்ஸ் கண்டெண்டுகளுக்காக மாரத்தான் ஓடுவதால் மட்டும் போதைப் பொருட்களை ஒழித்துவிட முடியாது என்பதை உணர்ந்து, நாட்டின் எதிர்காலத் தூண்களான இளைஞர்களின் வாழ்க்கையைப் படுகுழியில் தள்ளிக்கொண்டிருக்கும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் தாராளப் புழக்கத்தை முற்றிலுமாகக் கட்டுப்படுத்தி ஒழிப்பதற்கான ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என முதலமைச்சரை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்
என்று தெரிவித்துள்ளார்.