தமிழக செய்திகள்

ஆ.ராசா மனப்பிறழ்வு நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்: விமர்சனத்திற்கு அமைச்சர் வன்னி அரசு பதிலடி!

விசிக-வினரை குறிவைத்து தேவையற்ற வார்த்தைகளைப் பேசுவதை ஆ.ராசா நிறுத்த வேண்டும் என அமைச்சர் வன்னி அரசு கூறினார்.

திமுகவில் இருந்து வெளியேறி தவெக அமைச்சரவையில் இடம்பெற்ற கட்சிகளுக்கு வெட்கம் இல்லையா, என கூட்டணி கட்சிகளை திமுக எம்.பி ஆ.ராசா கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.

இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அண்ணன் ஆ.ராசா, சமீபகாலமாக மனப்பிறழ்வு நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். எதைப் பேச வேண்டும் எதைப் பேசக் கூடாது என்று ஒரு வரையறை இல்லாமல் பேசுகிறார்.

மரியாதைக்குரிய முன்னாள் முதல்வர், ஆ.ராசாவை அழைத்து கண்டிக்க வேண்டும். அவருடைய செயல்பாடுகள் விடுதலை சிறுத்தைகளை குறிவைத்து, தூண்டிவிடுவதாக உள்ளது.

தமிழகத்தில் கடந்த 2006-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில், விடுதலைச் சிறுத்தைகள் திமுக கூட்டணியில் இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றது.

திமுக அன்றைக்கு வெறும் 96 இடங்களில் தான் வெற்றி பெற்றிருந்தது. ஆனால் நாங்கள் வெற்றி பெற்ற இரண்டு தொகுதிகளின் ஆதரவையும் திமுகவிற்கு அளித்தோம்.

திமுகவிற்கு காங்கிரசும், விடுதலை சிறுத்தைகளும் ஆதரவு கொடுத்தன. அப்போதெல்லாம் ஆ.ராசா பொங்கவில்லை, மகிழ்ச்சியாக இருந்தார்.

அந்த ஐந்தாண்டுகளும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, திமுக அரசை மைனாரிட்டி அரசு என்று தான் கூறினார்.

ஆகவே இவ்வாறு பேசுவதென்பது அவருக்கே சரியா என்பதை அவருடைய குணத்திற்கே விட்டு விடுகிறேன். மேலும் விடுதலை சிறுத்தைகளை குறிவைத்து, தேவையற்ற வார்த்தைகளை பேசுவதை நிறுத்த வேண்டும்.

திமுக தலைமை அவரை கண்டிக்க வேண்டும், கண்டிப்பார்கள் என நான் நம்புகிறேன்.

இவ்வாறு அமைச்சர் வன்னி அரசு கூறினார்.