ஆ ராசா
தமிழக செய்திகள்

போதை பொருளை தடுக்க அமைத்த 65 படைகள் எங்கே? ஆ.ராசா கேள்வி

மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் இவ்வளவு பெரிய அளவில் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது மிகவும் தீவிரமான விஷயம்.

திமுக எம்.பி. ஆ. ராசா இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு அவர் அளித்த பதில் பின்வருமாறு:-

கேள்வி: த.வெ.க. நிர்வாகி ஒருவரின் வீட்டில் சுமார் 135 கிலோ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. ஏற்கனவே திமுக ஆட்சியில் போதைப்பொருள் விவகாரம் தொடர்பாக மிகப்பெரிய போராட்டங்களையும் விமர்சனங்களையும் முன்வைத்த கட்சி, இன்று தன்னுடைய நிர்வாகி வீட்டிலேயே இவ்வளவு பெரிய அளவிலான போதைப்பொருள் சிக்கியிருப்பது குறித்து எந்த தகவலையும் தெரிவிக்காமல் இருக்கிறதே?

பதில்: முதலமைச்சர் பதவியேற்ற மேடையிலேயே ஒரு கையை காட்டினார். எல்லோருக்கும் தெரியும்.

திமுக ஆட்சியில் போதைப்பொருளைக் கட்டுப்படுத்தவில்லை, பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளைக் கட்டுப்படுத்தவில்லை என்று ஆட்சிக்கு வருவதற்கு முன்பு கூச்சலிட்டார்கள். அந்தக் குற்றச்சாட்டுகளை நம்பி மக்கள் வாக்களித்திருக்கலாம். அதனால் அவர்கள் ஆட்சிக்கு வந்திருக்கலாம். பரவாயில்லை.

ஆனால், இப்போது நான்கு மாதங்கள் கடந்துவிட்டன. போதைப்பொருள் தடுப்புப் பணிக்காக 65 குழுக்கள் செயல்படுகின்றன. ஏற்கனவே இந்தப் பணிகளை மேற்கொள்வதற்கு போதுமான குழுக்கள் இல்லை என்று கூறியவர்கள், இப்போது இவ்வளவு குழுக்களை அமைத்திருக்கிறார்கள்.

தற்போது டிஜிபி-யாக இருப்பவரின் பணிகளை நீங்கள் கவனித்துப் பாருங்கள். அவருடைய தலைமையில் நடைபெற்ற நடவடிக்கைகள் குறித்து எங்களுடைய சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் உள்ளிட்டோர் ஏற்கனவே பேசியிருக்கிறார்கள். அந்த நடவடிக்கைகளை எல்லாம் கொச்சைப்படுத்தி, இந்த ஆட்சியில் எதுவும் நடைபெறவில்லை என்று கூறியதற்குப் பிறகுதான் அவரை டிஜிபி-யாக நியமித்தார்கள். அதிலேயே ஒரு புரியாத புதிர் இருக்கிறது.

65 குழுக்கள்

ஆனால், இப்போது விஜய் முதலமைச்சரான பிறகு 65 குழுக்களை அமைத்திருக்கிறோம் என்று சொல்கிறார்கள். இந்த 65 குழுக்களும் கடந்த நான்கு மாதங்களாகத் தமிழ்நாட்டில் பணியாற்றிக் கொண்டிருக்கின்றன.

உங்களிடம் உளவுத்துறை இருக்கிறது. 65 குழுக்கள் இருக்கின்றன. இவை எல்லாவற்றையும் தாண்டி, டெல்லியிலிருந்து மத்திய வருவாய்ப் புலனாய்வுத் துறையினர் (DRI) வந்து இவ்வளவு பெரிய அளவிலான போதைப்பொருளைப் பறிமுதல் செய்திருக்கிறார்கள்.

135 கிலோ மெத்தம்பெட்டமைன் போதைப்பொருளின் மதிப்பு, டெல்லியில் பேசினால் சுமார் 800 கோடி முதல் 1,000 கோடி ரூபாய் வரை இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் இவ்வளவு பெரிய அளவில் சுமார் 1,000 கோடி ரூபாய் மதிப்பில் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது மிகவும் தீவிரமான விஷயம்.

இதுவரை சிறிய அளவில் போதைப்பொருள் கடத்தல் நடந்ததாகச் செய்திகள் வந்திருக்கின்றன. சில இடங்களிலிருந்து சிறிய அளவிலான போதைப்பொருட்கள் கொண்டு வரப்பட்டதாகக் கூறியிருக்கிறார்கள். ஆனால், இப்போது என்ன நடந்திருக்கிறது? தமிழ்நாடு போதைப்பொருள் கடத்தலுக்கான மையமாக மாறியிருக்கிறதா என்ற கேள்வி எழுகிறது.

135 கிலோ போதைப்பொருள் இங்கிருந்து இலங்கைக்கு கொண்டு செல்லப்பட இருந்ததாகக் கூறப்படுகிறது.

நான் மீண்டும் கேட்கிறேன். இவ்வளவு பெரிய அளவிலான போதைப்பொருள் தமிழ்நாட்டில் இருந்திருக்கிறது. இங்கு 65 குழுக்கள் செயல்பட்டுக்கொண்டிருக்கும்போது, இன்னும் எவ்வளவு போதைப்பொருள் இருக்கிறது என்பது யாருக்குத் தெரியும்?

கேட்டால், திமுக ஆட்சியில் இப்படித்தான் நடந்தது என்று சொல்வார்கள். அப்படியானால், இப்போது என்ன நடந்திருக்கிறது என்பதை ஒப்பிட்டுப் பாருங்கள்.

செய்தியாளர்: தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கிறாரே?

பதில்: அவர் வெறும் கட்சிப் பிரமுகர் மட்டுமல்ல. தொகுதிப் பொறுப்பாளர்.

திமுக-வில் யாராவது தவறு செய்துவிட்டு, ராஜாவுடனோ, உதயநிதியுடனோ, பரந்தாமனுடனோ புகைப்படம் எடுத்திருந்தால், அவர்களைத் திமுக-வினர் என்று சொல்வீர்கள். ஆனால், இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர் கட்சியின் அதிகாரப்பூர்வப் பொறுப்பில் இருந்தவர். மயிலாடுதுறை மாவட்டம், கீழையூர் ஒன்றியச் செயற்குழு உறுப்பினராக இருந்தவர் என்று கூறப்படுகிறது.

கட்சியின் அதிகாரப் பொறுப்புகளில் இருப்பவர்கள்

இதற்கு முன்னதாகவும் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் தொடர்பாகப் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்ட செய்திகள் வந்திருக்கின்றன. ஈரோட்டைச் சேர்ந்த அருணன் என்பவரிடம் 140 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டதாகவும், வேதாரண்யம் வடக்கு ஒன்றிய செயலாளர் அருண்பாண்டியன் தொடர்பாக 120 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதாகவும், பூபதி ராஜா என்ற நிர்வாகி தொடர்பாக ஜூன் 26-ம் தேதி வாகனச் சோதனையில் 12 கிலோ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் செய்திகள் வந்திருக்கின்றன.

இவர்கள் எல்லோருமே கட்சியின் அதிகாரப்பூர்வப் பொறுப்புகளில் இருந்தவர்கள் என்று கூறப்படுகிறது.

ஆனால், எங்களுடன் யாராவது ஒரு புகைப்படம் எடுத்துக்கொண்டால், அதை வைத்துக்கொண்டு எவ்வளவு அரசியல் செய்வீர்கள்.

ஒரு அரசியல் கட்சித் தலைவர், அரசியல் பிரமுகர், நாடாளுமன்ற உறுப்பினர் அல்லது சட்டமன்ற உறுப்பினர் யாராவது எங்களுடன் வந்து நிற்கும்போது, அவர்களை பற்றிய எல்லா விவரங்களையும் நாங்கள் முன்கூட்டியே விசாரித்து, அவர்களுடைய தொடர்புகள் அனைத்தையும் சரிபார்த்துவிட்டுத்தான் புகைப்படம் எடுத்துக்கொள்ள முடியும் என்று சொல்ல முடியுமா?

அரசியல் தலைவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டதை வைத்து எவ்வளவு பிரச்சாரம் செய்தீர்கள்.

ஆனால், இப்போது உங்கள் கட்சியின் நிர்வாகி, தேர்தல் பொறுப்பாளர், ஒன்றியச் செயலாளர் உள்ளிட்டோர் தொடர்பாக இவ்வளவு பெரிய அளவிலான போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது.

1000 கோடி ரூபாய் எனக் கூறப்படுகிறது

இதன் மதிப்பு சுமார் 1,000 கோடி ரூபாய் என்று கூறப்படுகிறது. இவ்வளவு பெரிய அளவிலான போதைப்பொருள் தமிழ்நாட்டில் வைக்கப்பட்டு, இலங்கைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகச் செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

அப்படியானால், இன்னும் எவ்வளவு போதைப்பொருள் இருக்கிறது? இன்னும் எத்தனை இடங்களில் இருக்கிறது? இதற்கு முன்னர் தமிழ்நாட்டில் இதேபோன்ற பொருள் இவ்வளவு பெரிய அளவில் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறதா?

இந்த மெத்தம்பெட்டமைன் விவகாரம் என்பது வெறும் அரசியல் பிரச்சினை மட்டுமல்ல. தமிழ்நாட்டின் நிர்வாகத்துக்கும், பாதுகாப்புக்கும் தொடர்புடைய மிக முக்கியமான பிரச்சினை.

தமிழ்நாட்டில் இதற்கு முன்னர் இவ்வளவு பெரிய அளவில் இந்த வகையான போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்ட வரலாறு இருக்கிறதா என்பதையும் ஆராய வேண்டும்.

65 குழுக்களை அமைத்திருக்கிறோம் என்று கூறுகிறார்கள். ஆனால், இவ்வளவு பெரிய அளவிலான போதைப்பொருள் எங்கிருந்து வந்தது? எங்கே கொண்டு செல்லப்பட்டது? இதை கண்டுபிடிக்க வேண்டிய பொறுப்பு யாருக்கு இருக்கிறது?

இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறும்போது, உரிய விசாரணை நடத்தப்பட்டு, உண்மைகள் வெளிக்கொண்டுவரப்பட வேண்டும்.

போராட்டம் நடத்தப்படுமா?

செய்தியாளர்: இவ்வளவு பெரிய அளவில் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறதே. இதுகுறித்து திமுக பெரிய அளவில் போராட்டம் நடத்துமா? தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள் என்று கூறி போராட்டம் நடத்துவீர்களா?

பதில்: அதைப் பற்றி எங்கள் தலைவர் முடிவு செய்வார்.

ஒரு குறிப்பிட்ட நிர்வாகியிடம் இவ்வளவு பெரிய அளவிலான போதைப்பொருள் சிக்கியிருக்கிறது. இதை வைத்துக்கொண்டு, யாரும் எங்களை கைது செய்யமாட்டார்கள் என்ற எண்ணத்தில் அவர்கள் செயல்பட்டார்களா என்ற கேள்வி எழுகிறது.

இது ஒரு போதைப்பொருள் கடத்தல் மையமாக மாறியிருக்கிறது என்ற குற்றச்சாட்டை நீங்கள் முன்வைக்கிறீர்கள். நான் ஏற்கனவே சொன்னேன். இப்போது இது ஒரு மையமாக மாறிவிட்டதா என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

இதற்கு முன்னர் ஒருவரை கைது செய்தபோது, டெல்லிக்கு சென்று கைது செய்ததை வைத்துக்கொண்டு எவ்வளவு விமர்சனங்களை முன்வைத்தீர்கள்? இப்போது நேரடியாகப் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது.

பொறுப்பு இந்த அரசாங்கத்திற்கு இருக்கிறது

கேள்வி: தமிழ்நாட்டில் இதற்கு முன்னர் இவ்வளவு பெரிய அளவில் இந்தப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டதில்லை என்று கூறப்படுகிறது. இதற்கு என்ன பதில் சொல்லப்போகிறீர்கள்?.

பதில்: இப்போது ஆட்சி மாறியிருக்கிறது. போதைப்பொருளைத் தடுக்க வேண்டிய பொறுப்பு இந்த அரசாங்கத்துக்கு இருக்கிறது.

Stop Run, Start Drug என்று சொல்வது, போதைப்பொருளைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது போன்றவற்றைப் பற்றிப் பேசுகிறார்கள். ஆனால், இப்போது இவ்வளவு பெரிய அளவில் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கும்போது, இந்த அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது என்ற கேள்வி எழுகிறது.

இந்தப் போதைப்பொருள் எங்கிருந்து வந்தது? யார் கொண்டு வந்தார்கள்? எங்கே கொண்டு செல்லப்பட இருந்தது? இதற்குப் பின்னால் யார் இருக்கிறார்கள்? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் பதில் கிடைக்க வேண்டும்.

பெரிய வலையமைப்பு இருக்கிறதா?

இவ்வளவு பெரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல் நடைபெற்றிருக்கிறது என்றால், அதற்குப் பின்னால் ஒரு பெரிய வலையமைப்பு இருக்கிறதா என்பதையும் விசாரிக்க வேண்டும்.

செய்தியாளர்: பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளின் மூலம் கிடைத்திருக்கக்கூடிய பணம் அரசியல் கட்சிகளுக்குப் பயன்படுத்தப்பட்டிருக்குமா?

பதில்: இந்தப் பணத்தை எப்படி முறையாக அரசாங்கத்தின் திட்டங்களுக்குப் பயன்படுத்த முடியும்? இவ்வளவு பெரிய அளவில் பணம் கிடைத்திருக்கிறது என்றால், அந்தப் பணம் எங்கே செல்கிறது? யார் அதைப் பயன்படுத்துகிறார்கள்? இதையெல்லாம் விசாரிக்க வேண்டும்.

இந்தப் பணத்தை அரசாங்கத்தின் கருவூலத்துக்குக் கொண்டு வந்து, நாங்கள் இதைப் பயன்படுத்தி பாலம் கட்டப்போகிறோம் என்று சொல்ல முடியுமா?

எப்போது தமிழ்நாட்டுக்குள் வந்தது

செய்தியாளர்: கட்சிக்காக இந்தப் பணம் பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும் அல்லது அமைச்சர்கள் பயன்படுத்தியிருக்க வேண்டும் என்று நீங்கள் சந்தேகப்படுகிறீர்களா?

பதில்: நான் கேட்கும் கேள்வி அதுவல்ல.

இவ்வளவு பெரிய அளவிலான போதைப்பொருள் எப்போது தமிழ்நாட்டுக்குள் வந்தது? எத்தனை இடங்களில் இதுபோன்ற போதைப்பொருள் இருக்கிறது? இலங்கைக்குக் கொண்டு செல்லப்பட்டபோதுதான் இது பிடிபட்டிருக்கிறது.

நீங்கள் நியமித்த டிஜிபி இருக்கிறார். 65 குழுக்கள் இருக்கின்றன. போதைப்பொருள் தடுப்புப் படைகள் இருக்கின்றன. இவர்கள் எல்லோரும் என்ன செய்துகொண்டிருக்கிறார்கள்?

இந்தப் போதைப்பொருளை அவர்கள் பறிமுதல் செய்யவில்லை. வேறு ஒரு அமைப்புதான் அதைப் பறிமுதல் செய்திருக்கிறது.

தமிழ்நாட்டில் இதுதான் கடைசியாகப் பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருள் என்று அவர்கள் சொல்லவில்லை. எங்களுக்குக் கிடைத்த தகவல்களின்படி, இன்னும் அதிகமான போதைப்பொருள் இருக்கக்கூடும். எதிர்காலத்திலும் இதுபோன்ற சம்பவங்கள் வெளிவரலாம்.

இதையெல்லாம் சாதாரணமாக எடுத்துக்கொண்டு பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

கடந்த காலங்களில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் திமுக ஆட்சியில் போதைப்பொருள் பயன்பாடு அதிகமாக இருப்பதாகச் சட்டமன்றத்தில் பல்வேறு புள்ளி விவரங்களைப் பேசியிருக்கிறார்கள்.

இப்போது இந்தச் சம்பவம் குறித்து அவர்களிடம் போய்க் கேளுங்கள். இவ்வளவு பெரிய அளவிலான போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறதே, இதற்கு என்ன பதில் சொல்லப்போகிறார்கள் என்று கேளுங்கள்.

பயங்கரவாத செயல்களுடன் தொடர்புடையது

எனக்குக் கிடைத்த தகவல்களின்படி, இந்த மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் பயங்கரவாதச் செயல்களுடனும் தொடர்புடையதாக இருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. மூளைச் சலவை செய்வதற்கும், சர்வதேச ஆயுதக் கடத்தலுக்கும், எல்லை தாண்டிய பயங்கரவாதச் செயல்களுக்கும் இதுபோன்ற வலையமைப்புகள் பயன்படுத்தப்படலாம் என்று கூறப்படுகிறது.

இது மிகவும் தீவிரமான பிரச்சினை. இதில் பாதுகாப்பு அச்சுறுத்தலும் இருக்கிறது; நிதி தொடர்பான அச்சுறுத்தலும் இருக்கிறது. அதற்குப் பிறகுதான் போதைப்பொருள் பயன்பாடு என்ற பிரச்சினை வருகிறது.

இவ்வளவு பெரிய அளவிலான போதைப்பொருள் தமிழ்நாட்டிலிருந்து இலங்கைக்குக் கொண்டு செல்லப்பட இருந்ததாகச் சொல்லப்படும் நிலையில், மத்திய அரசு அதைக் கைப்பற்றியிருக்கிறது. ஆனால், இதுகுறித்து அரசாங்கம் பெரிய அளவில் பதற்றமடைந்ததாகவோ, உரிய நடவடிக்கைகளை உடனடியாக அறிவித்ததாகவோ தெரியவில்லை. மிகவும் சாதாரணமாகப் பேசுகிறார்கள்.

இவ்வளவு தீவிரமான பிரச்சினையைச் சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. இதற்குப் பின்னால் என்ன இருக்கிறது என்பதை முழுமையாக விசாரிக்க வேண்டும்.

செய்தியாளர்: இதில் எந்த மர்மமும் இல்லை என்று நீங்கள் கூறுகிறீர்களா?

பதில்: இதில் மர்மம் எதுவும் இல்லை என்று சொல்வதைவிட, நீங்கள் கணக்கிட்டுப் பார்த்தாலே பல கேள்விகள் எழுகின்றன. அதற்கான பதில்களை அரசாங்கம் அளிக்க வேண்டும்.

உங்களுடைய போதைப்பொருள் தடுப்புப் படைகள் எங்கே போயின? போதைப்பொருளுக்கு எதிராகப் பிரசாரம் செய்தீர்கள். மாணவர்கள் மத்தியில் நின்று சத்தியம் செய்தீர்கள். அந்தச் சத்தியம் என்ன ஆனது?

எல்லாமே ரீல்ஸாகத்தான் இருக்கிறதா? நீங்கள் செய்த பிரசாரங்கள் எல்லாம் சமூக வலைதளங்களில் வெளியிடப்படும் காணொளிகளுக்காக மட்டும்தானா?

Start Run, Stop Drug என்று சொல்லிக்கொண்டிருந்தீர்கள். ஆனால், இப்போது என்ன நடந்திருக்கிறது?

இந்த அரசாங்கம் இதுபோன்ற செயல்களைத் தடுக்க வேண்டிய பொறுப்பைச் சரியாக நிறைவேற்றுகிறதா என்ற கேள்வி எழுகிறது.

வெறும் ரீல்ஸ்களில் தங்களை நல்லவர்களாகச் சித்தரித்துக்கொண்டு செயல்படுவதால் மட்டும் போதாது. உண்மையில் என்ன நடவடிக்கை எடுக்கிறார்கள் என்பதைத்தான் மக்கள் பார்க்கிறார்கள்.

இன்றைக்கு நடந்துகொண்டிருப்பதை மக்கள் அறிவார்கள். இந்தச் செய்திகளை மக்களிடம் கொண்டுசேர்க்க வேண்டிய பொறுப்பு உங்களுக்கு இருக்கிறது.

SCROLL FOR NEXT