தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக இந்தியாவில் தற்போது ஒரு புதிய வினோதமான வேலைவாய்ப்பு உருவாகியுள்ளது. இல்லத்தரசிகள் மற்றும் பகுதிநேர வேலை தேடுபவர்கள் தங்களின் தலையில் கேமராக்களைப் பொருத்திக்கொண்டு, தங்களின் அன்றாட வீட்டு வேலைகளைப் பதிவு செய்து வருமானம் ஈட்டி வருகின்றனர். பதிவு செய்யப்படும் இந்த காணொளிகள் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு அனுப்பப்படுகின்றன.
அங்குள்ள செயற்கை நுண்ணறிவு AI மாடல்களுக்கும், மனிதர்களைப் போன்று வேலை செய்யக் கூடிய ரோபோக்களுக்கும் பயிற்சி அளிக்க இந்தத் தரவுகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த காணொளிகளைப் பதிவு செய்பவர்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு 250 ரூபாய் வரை வருமானம் வழங்கப்படுகிறது. தற்போதைய நிலையில் இது இல்லத்தரசிகள் மத்தியில் மட்டுமின்றி, சில குறிப்பிட்ட தொழிற்சாலைகளிலும் மனிதர்களின் வேலை செய்யும் முறையைக் கற்றுக்கொள்ள நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டின் கரூர் மாவட்டத்தை மையமாகக் கொண்டு, இந்தியாவிலும் அமெரிக்காவிலும் செயல்பட்டு வரும் "ஆப்ஜெக்ட்வேஸ்" என்ற AI தரவு நிறுவனம் தான் இந்தத் திட்டத்தை முன்னெடுத்து வருகிறது. இதன் தலைமை நிர்வாக அதிகாரி ரவி சங்கர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் ஆவார். இந்த நிறுவனம் "Amazon SageMaker" போன்ற உலகின் முன்னணி Fortune 500 தொழில்நுட்ப நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுகிறது.
ஏன் சாதாரணமாக வீடியோ எடுக்காமல் தலையில் கேமரா மாட்ட வேண்டும் என்ற கேள்வி நமக்கு வரலாம். ரோபோக்களுக்கு மனிதர்களின் பார்வையில் உலகம் எப்படித் தெரிகிறது என்பதைப் புரிய வைக்க வேண்டும். இதற்கு "எகோசென்ட்ரிக் டேட்டா" (முதல் நபர் பார்வைத் தரவு) என்று பெயர். தலையில் ஸ்மார்ட்போன் அல்லது கேமராவை மாட்டிக்கொண்டு வேலை செய்யும்போது, கைகள் எப்படி நகர்கின்றன, பொருட்களை எப்படிப் பிடிக்கிறோம் என்பதை ரோபோக்களால் துல்லியமாகக் கற்றுக்கொள்ள முடிகிறது. இதற்கென பிரத்யேக செயலிகள் பயன்படுத்தப்படுகின்றன. இதில் கைகள் சரியாகத் தெரியவில்லை என்றால், "Hands not detected" என்று அந்த செயலி எச்சரிக்கை செய்யும்.
சென்னை போன்ற நகரங்களில் இருக்கும் இல்லத்தரசிகள், சிறப்பு ஸ்டுடியோக்கள், இதற்கென பிரத்யேகமாக அமைக்கப்பட்ட செயற்கை அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன. அங்கு துணிகளை மடிப்பது, பென்சில் சீவுவது, தண்ணீர் பாட்டில்களை அடுக்குவது போன்ற வேலைகள் மீண்டும் மீண்டும் செய்யப்படுகின்றன. உதாரணமாக, 21 வயது பொறியியல் பட்டதாரி ராணி என்பவர், ஒரு நாளைக்கு 90 முறை படுக்கையின் வெவ்வேறு இடங்களில் துண்டை மடித்து வீடியோ எடுக்கிறார்.
கரூர் ஜவுளித் தொழிற்சாலைகளிலும், பெங்களூருவில் தெருவோரம் பூக்கட்டும் சாதாரண தொழிலாளர்களிடமும் இந்த கேமராக்கள் மூலம் தரவுகள் சேகரிக்கப்படுகின்றன. இதனால், உலகளவில் 2050-ஆம் ஆண்டிற்குள் 100 கோடிக்கும் அதிகமான ஹியூமனாய்டு ரோபோக்கள் (Humanoid Robots) பயன்பாட்டிற்கு வரலாம் என கணிக்கப்பட்டுள்ளது. இதனால், அன்றாடம் கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தும் தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள் என ஒரு வித அச்சம் எழுந்துள்ளது.
இந்தியாவின் நிதி ஆயோக் போன்ற அமைப்புகள், AI தொழில்நுட்பத்தால் வேலைவாய்ப்பு இழப்பு ஏற்படுவது குறித்து விவாதிக்கும் போது பெரும்பாலும் ஐடி ஊழியர்களைப் பற்றியே பேசுகின்றன. ஆனால், இந்தியாவின் 49 கோடிக்கும் அதிகமான முறைசாரா தொழிலாளர்களின் எதிர்காலம் இதனால் என்னவாகும் என்ற கவலை தற்போது எழுந்துள்ளது. இன்று 250 ரூபாய்க்காகச் செய்யப்படும் இந்த வேலை, எதிர்காலத்தில் சாதாரண மனிதர்களின் அன்றாட வேலைவாய்ப்பையே பறித்துவிடுமோ என்ற அச்சம் தான் சமூக வலைத்தளங்களில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
இந்த புதிய வேலைவாய்ப்பு சமூக ஊடகங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. "இன்று 250 ரூபாய்க்கு ஆசைப்பட்டு, எதிர்காலத்தில் மனிதர்களின் வேலைவாய்ப்புகளை ரோபோக்களிடம் இழக்க நேரிடும்" என்று பலர் கவலை தெரிவித்துள்ளனர். மேலும், இந்தத் தரவுகள் மூலம் மனித உழைப்பு சுரண்டப்படுவதாக நெட்டிசன்கள் சிலர் குற்றம் சாட்டுகின்றனர். கழிவுநீர் சுத்தம் செய்தல் போன்ற மனிதர்களுக்கு ஆபத்தான மற்றும் கடினமான வேலைகளில் ரோபோக்களைப் பயன்படுத்த இந்தத் தொழில்நுட்பத்தை வழிநடத்தலாம் என்றும் சிலர் தங்களது கருத்துக்களைப் பகிர்ந்துள்ளனர்.
இந்தத் தொழில்நுட்ப வளர்ச்சியை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்? ரோபோக்கள் மனிதர்களின் கடின உழைப்பைக் குறைக்கும் என்று நம்புகிறீர்களா, அல்லது வேலைவாய்ப்பைப் பறிக்கும் என்று நினைக்கிறீர்களா?