தமிழக செய்திகள்

திம்பம் மலைப்பாதையில் வாகனத்தை வழிமறித்து உணவை தேடிய ஒற்றை யானை: வாகன ஓட்டிகள் அச்சம்

தற்போது வனப்பகுதியில் வறட்சியான சூழ்நிலை உள்ளதால் உணவு, தண்ணீர் தேடி வனவிலங்குகள் கிராமத்துக்குள் வருவது தொடர் கதையாகிவிட்டது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் வனப்பகுதியில் அமைந்துள்ளது திம்பம் மலைப்பகுதி. தமிழகம்- கர்நாடகாவை இணைக்கும் மிக முக்கிய போக்குவரத்து பகுதியாக திம்பம் மலைப்பகுதி இருந்து வருகிறது .

27 கொண்டை ஊசி வளைவுகளைக் கொண்டது திம்பம் மலைப்பகுதி. அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ளதால் யானை, சிறுத்தை, புலி நடமாட்டம் அதிக அளவில் இந்த மலைப்பாதையில் இருந்து வருகிறது.

இந்நிலையில் நேற்று திம்பம் மலைப்பாதை வழியாக வாகனம் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென வனப்பகுதி விட்டு வெளியேறிய ஒற்றை யானை அந்த வாகனத்தை வழி மறித்து நிறுத்தி வாகனத்தின் மேல் பகுதியில் உணவு ஏதும் உள்ளதா என தனது தும்பிக்கையால் பார்த்தது. சிறிது நேரம் பார்த்து பின்னர் உணவு ஏதும் இல்லாததால் ஏமாற்றம் அடைந்து அந்த ஒற்றை யானை திரும்பிச் சென்றது.

இந்த காட்சிகள் அனைத்தும் வாகனத்தில் பொருத்தப்பட்டிருந்த கேமராவில் பதிவாகி இருந்தது. தற்போது சமூக வலைத்தளங்களில் இந்த காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது.

ஒற்றை யானை நடமாட்டம் காரணமாக திம்பம் மலைப்பகுதியில் செல்லும் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர்.

இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, தற்போது வனப்பகுதியில் வறட்சியான சூழ்நிலை உள்ளதால் உணவு, தண்ணீர் தேடி வனவிலங்குகள் கிராமத்துக்குள் வருவது தொடர் கதையாகிவிட்டது. குறிப்பாக யானைகள் அதிக அளவில் வசித்து வருவதால் அவைகள் ஊருக்குள்ளும் நெடுஞ்சாலையில் வரும் வாகனங்களை வழிமறித்தும் நிற்பது தொடர்கதை ஆகி வருகிறது. எனவே வனப்பகுதி வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கவனமாக இருக்க வேண்டும்.

குறிப்பாக இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் எக்காரணம் கொண்டும் வனப்பகுதிக்குள் தங்களது வாகனங்களை நிறுத்த வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.