தமிழக செய்திகள்

‘வேறு பெண்ணுடன் கணவன் தொடர்பில் இருப்பது கொடுமையாகாது’ - ஒன்றரை வயது குழந்தையுடன் மனைவி தற்கொலை செய்துகொண்ட வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் கருத்து!

அந்த உறவு மனைவியைத் தற்கொலைக்குத் தூண்டும் தன்மை கொண்டதல்ல என்று இந்த நீதிமன்றம் கருதுகிறது.

கணவன் வேறொரு பெண்ணுடன் வைத்திருக்கும் முறையற்ற உறவு, இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் தானாகவே மனைவிக்கு எதிரான கொடுமை ஆகாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

குழந்தையுடன் சேர்ந்து மனைவி தற்கொலை செய்துகொண்ட வழக்கில், கணவர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து, பெண்ணின் சகோதரர் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளார் நீதிபதி சுந்தர் மோகன்.

“இந்த வழக்கிலும், இரண்டாவது பிரதிவாதிக்கு முறையற்ற உறவு இருந்தது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. உண்மைகளின் அடிப்படையில், அந்த உறவு மனைவியைத் தற்கொலைக்குத் தூண்டும் தன்மை கொண்டதல்ல என்று இந்த நீதிமன்றம் கருதுகிறது.

இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 498A-ன் கீழ் உள்ள குற்றங்களை ஈர்ப்பதற்கு, வெறும் முறையற்ற உறவை விட மேலான ஒன்றை அரசுத் தரப்பு நிறுவ வேண்டும் என்பது நன்கு நிறுவப்பட்ட ஒரு சட்டமாகும், ஆனால் இந்த வழக்கில் அது அவ்வாறு இல்லை,” என்று நீதிமன்றம் கூறியது.

அரசுத்தரப்பு

அரசுத் தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதத்தின்படி, கடந்த 2008-ல் வழக்கில் சம்பந்தப்பட்ட தம்பதியினர் திருமணம் செய்துகொண்டுள்ளனர். திருமணத்திற்கு பிறகு வரதட்சணைக் கோரி அப்பெண் கணவரால் பலமுறை கொடுமைப்படுத்தப்பட்டுள்ளார்.

மேலும் வேறொரு பெண்ணுடன் தகாத உறவிலும் இருந்து வந்துள்ளார். மேலும் குழந்தையையும் பராமரிக்க தவறி வந்துள்ளார்.

மனைவி தனது ஒன்றரை வயது குழந்தையுடன் தண்ணீரில் குதித்து தற்கொலை செய்துகொண்டதால், கணவர் இந்திய தண்டனைச் சட்டத்தின் 498A மற்றும் 306 பிரிவுகளின் கீழ் குற்றவாளி என வாதிடப்பட்டது.

ஆனால் போதிய ஆதாரங்கள் இல்லை எனக்கூறி விசாரணை நீதிமன்றம் கணவரை விடுவித்தது.

மேலும், கணவர் மனைவியைக் கொடுமைப்படுத்தி, அவரைத் தற்கொலைக்குத் தூண்டினார் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்றும் விசாரணை நீதிமன்றம் குறிப்பிட்டது.

பெண்தரப்பு

வரதட்சணை கொடுமை மற்றும் முறையற்ற உறவு தொடர்பாகத் தனது சாட்சியத்தையும், தனது தாயார் மற்றும் பிற சாட்சிகளின் சாட்சியங்களையும் விசாரணை நீதிமன்றம் புறக்கணித்துவிட்டதாக பெண்ணின் சகோதரர் வாதிட்டார்.

தனது மகள் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாக பெண்ணின் தாயார் தெளிவாக வாக்குமூலம் அளித்திருந்ததாகவும், சாட்சியங்களைக் கருத்தில் கொள்ளாமல் விசாரணை நீதிமன்றம் அளித்த தீர்ப்பு தவறானது மற்றும் ரத்து செய்யப்பட வேண்டியது என்றும் வாதிடப்பட்டது.

விடுவிக்கப்பட்டவர் தரப்பு

வரதட்சணைக் கொடுமையையோ அல்லது தான் தவறான உறவில் இருந்ததையோ அரசுத்தரப்பு நிரூபிக்கவில்லை என கணவர் தரப்பில் வாதிடப்பட்டது.

நீதிமன்றம்

இதனைக்கேட்ட நீதிமன்றம், சாட்சிகள் அனைவரும் வரதட்சணை குறித்து பேசியிருந்தாலும், குற்றச்சாட்டுகள் தெளிவானதாக இல்லை என்று கூறியது.

முறையற்ற உறவு நிரூபிக்கப்படவில்லை என்ற விசாரணை நீதிமன்றத்தின் முடிவு தவறானது என்றாலும், அத்தகைய முறையற்ற உறவு மட்டுமே இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 498A-இன் கீழ் கொடுமையாகாது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

விசாரணை நீதிமன்றம் கூறிய விடுதலைக்கான காரணங்கள் ஏற்கமுடியாவிட்டாலும், அரசுத்தரப்பு குற்றங்களை நிரூபிக்கவில்லை எனக்கூறி, மேல்முறையீட்டை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

SCROLL FOR NEXT