பதவி, தனிப்பட்ட வாழ்க்கை என பலவகையிலிருந்து வரும் அழுத்தங்களையும், இக்கட்டான சூழல்களையும் முதலமைச்சர் விஜய் மிகவும் நிதானத்துடனும், எளிதாகவும் கையாள்வது ஒரு தந்தையாக தனக்குப் பெருமையளிப்பதாக இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப்பதிவில்.,
“எத்தனை அழுத்தங்கள் இருந்தாலும், அதை எளிதாகக் கையாளும் முதல்வரை சந்தித்தது, ஒரு தந்தையாகப் பெருமை பெற்ற நேரம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
சட்டமன்றத்தில் இன்று நடைபெற்ற காவல் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் பதிலுரையின் போது திமுகவின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து முதலமைச்சர் விஜய் பேசினார்.
முதலமைச்சர் விஜய் உரையாற்றும்போது திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகரின் இருக்கையை முற்றுகையிட்டு முழக்கங்களை எழுப்பியதோடு, அவையின் மையப் பகுதிக்குச் சென்று தர்ணாவிலும் ஈடுபட்டனர்.
இந்நிலையில் இன்றைய அவை நடவடிக்கைகளுக்கு பிறகு முதலமைச்சர் விஜய்யை அவரது பெற்றோர்கள் ஷோபா மற்றும் எஸ்.ஏ.சந்திரசேகர் சந்தித்துள்ளனர்.
அதனைத்தொடர்ந்து இந்தப் பதிவை அவர் வெளியிட்டுள்ளார்.