ஜெம் கிரானைட்ஸ் நிறுவன உரிமையாளர் வீரமணிக்கு எதிராக வீடியோ ஆதாரங்கள் இருந்தபோதிலும், அவர்மீது நடவடிக்கை எடுக்காதது ஏன் என்பது குறித்து முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் தரவேண்டும் என தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் இன்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தங்களது ஆட்சியில்தான் வீரமணி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது என்றும், போதிய ஆதாரங்கள் கிடைத்த பின்பு, அவர் கைது செய்யப்படுவார் என காவல்துறை நீதிமன்றத்தில் தெரிவித்ததாக திமுக சட்டத்துறை செயலாளர் என்.ஆர். இளங்கோ தெரிவித்துள்ளார்.
மேலும் குற்றம் சாட்டப்பட்டவரைக் காப்பாற்றும் வகையில் அமைச்சர் நிர்மல் குமார் பேசிவருவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
அமைச்சரின் குற்றச்சாட்டு தொடர்பாக விளக்கமளித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய என்.ஆர். இளங்கோ கூறியதாவது;
“தொடர்ச்சியாக, நிர்மல் குமார் தான் ஒரு சட்டத்துறை அமைச்சர் என்பதை மறந்து, மக்களுக்காகப் பணியாற்ற வேண்டிய பணியை மறந்து, மக்களுக்கு உண்மை நிலவரத்தை மட்டுமே தர வேண்டும் என்ற பொறுப்புணர்ச்சியை மறந்து, அரசியல் லாபங்களுக்காகவும், இடைத்தேர்தலில் எப்படியாவது மக்கள் கவனத்தைத் திசைதிருப்புவதற்காகவும் இதுபோன்ற பேட்டிகளைத் தருவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.
குறிப்பாகச் சொல்லப்போனால், மு.க.ஸ்டாலின் பற்றி, அவர் மிசாவில் அனுபவித்த கொடுமைகள் குறித்து மிகவும் அவதூறான தகவல்களைப் பதிவு செய்தார். அதற்காக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா, ஏற்கனவே காவல்துறையில் ஒரு புகார் கொடுத்துள்ளார்.
இன்றைக்கு ஜெம் கிரானைட் வீரமணி மீது பதியப்பட்டுள்ள போக்சோ வழக்கை குறித்து, அது ஏதோ திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் நீர்த்துப்போகச் செய்ததாக ஒரு கருத்தைப் பரப்பியிருக்கிறார். அது முற்றிலும் தவறான கருத்தாகும்.
ஏனெனில், 7.10.2025-ல் பதிவு செய்யப்பட்ட அந்த வழக்கு அப்போது காவல்துறையினரால் விசாரிக்கப்பட்டு, வீடுகள் சோதனையிடப்பட்டு, கிடைத்திருந்த ஆதாரங்களை வைத்து மேல்விசாரணை செய்து, உரிய ஆதாரங்கள் கிடைக்காததால், நீதிமன்றத்தில் இதுவரை செய்த புலன் விசாரணையில் உரிய ஆதாரங்கள் கிடைக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கை நாங்கள் கைவிடவில்லை. உரிய ஆதாரங்களைத் திரட்டும் வரை இந்த வழக்கினுடைய மேல்விசாரணையைத் தள்ளி வைத்திருக்கிறோம் என்று குறிப்பிட்டுதான், போக்சோ நீதிமன்றத்தில் குறிப்பாணை தாக்கல் செய்திருக்கிறார்கள்.
அதுவும் கூட, அப்போது இருந்த டைரக்டர் ஆஃப் பப்ளிக் பிராசிகியூஷன், அடிஷனல் டைரக்டர் ஆஃப் பப்ளிக் பிராசிகியூஷன் ஆகியோருடைய கருத்துருவின் அடிப்படையில் அது தாக்கல் செய்யப்பட்டது.
எனவே, திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் அந்த வழக்கின் புலன் விசாரணை கைவிடப்படவில்லை. மேல்விசாரணை தொடரும் என்றுதான் குறிப்பாணை தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. இதை மறைத்து, அவதூறான கருத்துகளை சட்ட அமைச்சர் பரப்பி வருகிறார்.
குறிப்பாக, திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய நிலைப்பாடு என்னவென்றால், குற்றம் புரிபவர்கள் யாராக இருந்தாலும், குறிப்பாக பாலியல் வன்முறைகளில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும், உரிய தண்டனை கொடுக்கப்பட வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.
இதுபோன்ற வழக்குகளில் ஆதாரமற்ற செய்திகளைப் பரப்புவதே, எப்படியாவது குற்றம் சாட்டப்பட்டவர்களைக் காப்பாற்றிவிடலாமா என்ற எண்ணத்தோடு பேசுவதாகத்தான் தெரிகிறது.
ஏனென்று சொன்னால், இல்லாத அரசியல் அழுத்தங்களை இருப்பதாகச் சொன்னால், பாதிக்கப்பட்ட அந்த நபர்கள், இந்த வழக்கில் ஏதோ மிகப்பெரிய பிரச்சனை இருப்பது போல் இருக்கிறது என்று கருதி, அவர்கள் சாட்சியம் அளிக்காமல் அதிலிருந்து விலகிச் செல்வதற்காகவே, நிர்மல் குமார் குற்றம் சாட்டப்பட்ட நபர்களைக் காப்பாற்றுவதற்காகவே இந்த அறிக்கையை வெளியிடுவதாக நாங்கள் நம்புகிறோம்.
அதுமட்டுமல்ல, தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிக்கு வந்ததிலிருந்து, ஒரு நாளைக்கு இரண்டு பாலியல் குற்றங்களாவது புகார்களாக அளிக்கப்பட்டு வருகின்றன.
சொல்லப்போனால், என் கையில் இருக்கும் பட்டியலில் தமிழக வெற்றிக் கழக ஆட்சியில் நடந்திருக்கக்கூடிய பாலியல் குற்றங்களைப் பற்றி சொன்னால், அதற்கு ஒரு நாள் கூடப் போதாது.
ஆட்சிக்கு வந்த 150 நாட்களில் இதுவரை 219 பாலியல் குற்றங்கள் அரங்கேறியிருக்கின்றன. வேறு யாரோ அல்ல; தமிழக வெற்றிக் கழகத்தினுடைய பொறுப்பாளர்கள் அவர்களே பாலியல் குற்றங்களில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.
ஒரே ஒரு நாளில் மட்டும், 15-ஆம் தேதி ஜூன் 2026-ல் மட்டும், ஏறக்குறைய ஐந்து இடங்களில் சிறுமிகள் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார்கள்; பாலியல் குற்றங்களுக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார்கள்.
இதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல், சட்டம்-ஒழுங்கைப் பற்றி கவலைப்படாமல், அரசியல் லாபத்திற்காக குற்றம் சாட்டப்பட்டவர்களைக் காப்பாற்றும் நோக்கத்தில் மட்டுமே சட்டத்துறை அமைச்சர் இதுபோன்ற பேட்டிகளை அளித்து வருகிறார். சட்ட அமைச்சர் தன்னுடைய பொறுப்பை உணர்ந்து கொண்டு பேச வேண்டும்.
போக்சோ போன்ற சிறப்பு வழக்குகள் மிகக் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டியவை. அவற்றில் இந்தக் குற்றங்கள் பற்றி பொதுவெளியில் பேசி, அந்தக் குற்றங்களை நீர்த்துப்போகச் செய்வது என்பது சட்டம்-ஒழுங்குக்கு நல்லதல்ல. இதுபோன்று திசைதிருப்பும் வேலைகள் அந்த வழக்கை நீர்த்துப்போகச் செய்யும். அது கூடத் தெரியாமல் இருக்கிறார் ஒரு சட்ட அமைச்சர்.
மேலும், சட்ட அமைச்சர் தான் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர் என்று நினைத்துக்கொண்டு பேசுகிறார். அவதூறு செய்தால், அவதூறு பரப்பினால், அவரும் அவதூறு செய்த குற்றத்திற்கு உட்பட்டவர்தான். அதற்கான உரிய நடவடிக்கையை திராவிட முன்னேற்றக் கழகம் தொடரும்.
நான் இதுவரை சொன்னதில், குறைந்தபட்சம் மூன்று சிறுமிகளாவது பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.
அந்த வழக்குகளில் உரிய நடவடிக்கை எடுக்காத தமிழக வெற்றிக் கழக அரசு, இல்லாத கூற்றுகளைச் சொல்லி வழக்கை நீர்த்துப்போகச் செய்வது உண்மையிலேயே கண்டனத்துக்குரியது.
இந்தப் போக்கை தமிழக அமைச்சரவையில் இடம்பெற்றிருக்கிற அனைவரும் கைவிட வேண்டும் என்பதை நாங்கள் அழுத்தமாகப் பதிவு செய்கிறோம்.
இப்படியே மீறிச் சென்றால், வெறுமனே அவதூறு வழக்கு மட்டுமல்லாமல், போக்சோ வழக்கைத் திசைதிருப்பியதற்காகவும், குற்றவாளிகளைத் தப்பவைப்பதற்கு ஒரு வழியாக இருந்ததற்காகவும், அதற்குக் காரணமாக இருந்ததற்காகவும், உரிய பிரிவுகளில் அவர்கள் மீது வழக்கு தாக்கல் செய்வோம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்த வழக்கு விவகாரத்தில் அதிகாரிகளுக்கு பணம் வழங்கப்பட்டிருந்தால், அது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வரும். அவர்களிடம் உரிய ஆதாரங்கள் இருந்தால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திராவிட முன்னேற்றக் கழகத்துடன் தொடர்பு இருக்கிறது என்பதை அவர் ஆதாரத்தோடு நிரூபிக்க வேண்டும். அப்படி நிரூபிக்கவில்லை என்றால், அவர் பொதுவெளியில் மன்னிப்பு கேட்க வேண்டும். மன்னிப்பு கேட்கவில்லை என்றால், அவர் மீது உரிய வழக்கைத் தொடருவோம்.” என தெரிவித்தார்.