தமிழக செய்திகள்

‘தமிழ்நாட்டிற்கு கருப்பு நாள்’ - பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடல் குறித்து டி.ஆர்.பி.ராஜா கருத்து!

தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சி, ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சிக்கு அதன் உட்கட்டமைப்பு மிக மிக அவசியம்.

பரந்தூரில் விமான நிலையத் திட்டம் கைவிடப்பட்டது தொடர்பாக முன்னாள் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்.,

திமுக ஆட்சியில் தொழில் வளர்ச்சி

தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சி, ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சிக்கு அதன் உட்கட்டமைப்பு மிக மிக அவசியம். தமிழ்நாடு காணாத ஒரு தொழில் வளர்ச்சியை, இந்தியாவில் எந்த மாநிலமும் காணாத ஒரு தொழில் வளர்ச்சியை கடந்த ஐந்து ஆண்டு கால திராவிட மாடல் ஆட்சியில் தமிழ்நாடு கண்டது. இந்தியா வியந்து பார்த்தது. “நம்பர் ஒன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள்” என்று இந்தியாவே வியந்து பார்த்தது.

தமிழ்நாடு எப்படி இந்த வளர்ச்சி எல்லாம் கொடுக்கிறது என்று நம்மிடம் கற்றுக்கொண்டு, மற்ற மாநிலங்கள் எல்லாம் அதை செயல்படுத்தத் துவங்கினார்கள். அதற்குக் காரணம் துரிதமான திட்டமிடல், சரியான திட்டமிடல், தெளிவு எல்லாமே. அதைத் தாண்டி உள்கட்டமைப்பில் சாலைகள், துறைமுகங்கள், போக்குவரத்து வசமிகள் எல்லாம் சரியான நேரத்தில் முடிவெடுக்கப்பட்டு, திட்டங்கள் வகுக்கப்பட்டன.

அதில் முக்கியமான ஒரு திட்டம் துறைமுக இணைப்பு. அதேபோல கப்பல் போக்குவரத்தும், விமானப் போக்குவரத்தும், தரைவழிப் போக்குவரத்தும், அனைத்தும் சரியாக இருந்தால்தான் தயாரிக்கப்படும் பொருட்கள் எல்லாம் சரியான நேரத்தில், உரிய நேரத்தில் துறைமுகத்தை சென்றடையும்; உலகம் எங்கும் அது சென்றடையும். அந்த உள்கட்டமைப்பு மிகச் சரியாக இருக்கவேண்டும் என்பதில் மு.க.ஸ்டாலின் தெளிவாக இருந்தார்.

தமிழ்நாட்டிற்கு கருப்பு நாள்

இன்று தமிழ்நாட்டிற்கு கருப்பு நாள் என்றுதான் சொல்லவேண்டும். பொருளாதார வல்லுனர்கள், தொழில்நுட்ப வல்லுனர்களிடம் கேட்டு, பிறகு தேர்வு செய்யப்பட்ட பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை இன்று த.வெ.க அரசு கைவிட்டுள்ளது. இது ஒட்டுமொத்த வளர்ச்சி, சுற்றுலாத்துறைக்கு என மிகப்பெரிய அடி.

ஒரு திட்டத்தைக் கொண்டு வருவது எவ்வளவு கடினம் என்பது அரசு இயந்திரத்தில் பணிபுரிந்தவர்களுக்கு, ஏன் படித்த இளைஞர்கள் அனைவருக்கும் நன்றாகப் புரியும். திட்டத்தைக் கொண்டு வருவது சாதாரண விஷயம் இல்ல.

மீனம்பாக்கம் விமான நிலையம் நமது கட்டுப்பாட்டில் இல்லை

மீனம்பாக்கம் விமான நிலையம் மத்திய அரசின் கட்டுப்பாட்டின்கீழ் இருக்கும் நிலையம். மாநில அரசின் கட்டுப்பாடு அங்கு இருக்காது. ஆனால் பரந்தூரில் புதிய விமான நிலையம் வந்திருந்தால், அது முழுமையாக மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருந்திருக்கும். ஒட்டுமொத்த தமிழ்நாடு அரசின் சொத்தாக இருந்திருக்கும்.

அரசியல் வேண்டாம்

பல லட்சம் பேருக்கு, கோடிக்கணக்கான மக்களுக்கு, குறிப்பாக இளைஞர்களுக்கு, பெண்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கக்கூடிய இந்தத் துறையில் உங்கள் அரசியலைப் புகுத்தாதீர்கள். நீங்கள் இன்று அரசியல் செய்ய நினைத்து, இன்று தமிழ்நாட்டுக்கு மிகப்பெரிய, மிகப்பெரிய கேடை இங்கே கொண்டு வந்து சேர்த்திருக்கிறீர்கள்.

இந்த முடிவை மீண்டும் மறுபரிசீலனை செய்யவேண்டும். சிந்தனையே இல்லாமல், தொலைநோக்குப் பார்வை இல்லாமல் பரந்தூர் திட்டத்தை கைவிட்டது மிக மிக மிக தவறான ஒரு செயல். இதற்கு தமிழ்நாடு மக்கள் நிச்சயமாக எதிர்காலத்தில் உங்கள் மீது மிகப்பெரிய ஒரு பழியை நீங்களே சுமத்திக் கொண்டிருக்கிறீர்கள்.” என தெரிவித்தார்.