தமிழக செய்திகள்

ஜெம் வீரமணிமீது 9வது வழக்குப் பதிவு - இதுவரை 10 பேர் கைது!

ஒரு வழக்கில் மட்டும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில், ஜெம் கிரானைட்ஸ் நிறுவனர் வீரமணிமீது ஒன்பதாவது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட சிறுமி அளித்த புகாரின் அடிப்படையில், ஒன்பதாவது வழக்கு நவ.13 அன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் வீரமணியின் ஓட்டுநர் பாலா என்பவரை காவல்துறை கைது செய்துள்ளது.

இதன்மூலம் இந்த வழக்குகளில் இதுவரை 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதில் ஒரு வழக்கில் கடந்த நவ.11ம் தேதி, சென்னை உயர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், மற்ற வழக்குகளுக்கான குற்றப்பத்திரிக்கைகள் அடுத்த 10 முதல் 15 நாட்களில் ஒன்றன்பின் ஒன்றாகத் தாக்கல் செய்யப்படும் என்றும் சிறப்புப் புலனாய்வுக் குழு தெரிவித்துள்ளது.

வீட்டில் சோதனை

இதற்கிடையே, பாதிக்கப்பட்ட சிறுமி ஒருவர் நீதிமன்றத்தில் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஜெம் வீரமணியின் வீட்டில், சிறுமி ஒருவர் புதைக்கப்பட்டிருக்கலாம் என காவல்துறை மற்றும் சிறப்பு புலனாய்வுக் குழுவினர் சோதனை மேற்கொண்டனர்.

அவரது வீட்டின் வளாகம் மற்றும் பின்புறப் பகுதிகளில் பொக்லைன் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு, பல மணிநேரம் குழிகள் தோண்டப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது.

பல மணி நேர தீவிர சோதனைக்குப் பிறகு, அங்கு உடல்கள் அல்லது தடயங்கள் ஏதும் கண்டெடுக்கப்படாததால் தேடுதல் பணி தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட சிறுமி அளித்த தகவலின் அடிப்படையில் விசாரணை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT