மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் வேலைநாட்களை 125 நாட்களாக உயர்த்தி வழங்குதல், தமிழ்நாடு மகளிர் வாழ்வாதார இயக்கப் பணிகள் மற்றும் மகளிர் தொழில் மேம்பாட்டுத் திட்டங்களைச் செயல்படுத்துதல் என்பது உள்ளிட்ட 98 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
காஞ்சீபுரம் மாவட்டம், வாலாஜாபாத் ஒன்றியம் தேவரியம்பாக்கம் ஊராட்சியில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஊராட்சி தலைவர் அஜய்குமார் தலைமை தாங்கினார். பற்றாளராக துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கண்மணி பங்கேற்றார்.
உதவி இயக்குநர் உமா சங்கர், வாலாஜாபாத் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கோமளா, மீனாஸ்ரீ மற்றும் உதவித்திட்ட அலுவலர்கள் ராஜலட்சுமி, எழில்மதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறை ஆணையர் அமுதவல்லி சிறப்பு பார்வையாளராகப் பங்கேற்றார்.
கூட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் வேலைநாட்களை 125 நாட்களாக உயர்த்தி வழங்குதல், தமிழ்நாடு மகளிர் வாழ்வாதார இயக்கப் பணிகள் மற்றும் மகளிர் தொழில் மேம்பாட்டுத் திட்டங்களைச் செயல்படுத்துதல் என்பது உள்ளிட்ட 98 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மேலும் ஊராட்சியில் சிறப்பாகப் பணியாற்றிய தூய்மைப் பணியாளர்கள், தூய்மை காவலர்கள், மக்கள் நலப் பணியாளர், ஊரகத் தொழில்நுட்பப் பணியாளர், 100 சதவீத வரி செலுத்திய பொதுமக்கள் மற்றும் வீட்டிலேயே திடக்கழிவுகளைத் தரம் பிரித்து வழங்கிய விழிப்புணர்வுடைய பொதுமக்கள் எனத் தேர்ந்தெடுக்கப்பட்ட 10 பேர் கொண்ட குழுவிற்குச் சிறப்பு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
இவர்களை ஊக்குவிக்கும் விதமாக, தேவரியம்பாக்கம் ஊராட்சியில் இருந்து சென்னை வழியாக மதுரைக்கு விமானத்தில் இலவசமாக அழைத்துச் சென்று திரும்பும் சுற்றுலா நிகழ்வு எக்ஸ்னோரா தொண்டு நிறுவனம் பங்களிப்போடு ஏற்பாடு செய்யப்பட்டது.
முடிவில் வாலாஜாபாத் வட்டார வளர்ச்சி அலுவலர் கோமளா நன்றி கூறினார். இதில் வார்டு உறுப்பினர்கள், ஊராட்சிப் பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.