தமிழக செய்திகள்

8-வது ஊதியக் குழு கூட்டம்: 35 லட்சத்துக்கும் அதிகமான மத்திய அரசு ஊழியர்களுக்குச் சம்பள உயர்வு கிடைக்குமா?

ஊழியர்கள் மத்தியில் 8-வது ஊதியக் குழுவின் ‘ஃபிட்மென்ட் ஃபேக்டர்’ எவ்வளவு இருக்கும் என்ற மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

மத்திய அரசு வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ தகவல்களின்படி, 2026 மார்ச் 1 நிலவரப்படி இந்தியாவில் சுமார் 35.77 லட்சம் சிவில் மத்திய அரசு ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் சம்பள உயர்வு, படிகள் மற்றும் ஓய்வூதிய மாற்றங்கள் குறித்த ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட 8-வது மத்திய ஊதியக் குழுவின் மாநில அளவிலான கலந்தாய்வுக் கூட்டம் சென்னையில் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்துள்ளது.

சென்னையில் நடந்த கலந்தாய்வு கூட்டம்

மத்திய அரசு ஊழியர் சங்கங்கள், ஓய்வூதியதாரர் அமைப்புகள், ரெயில்வே மற்றும் பாதுகாப்புத் துறைப் பிரதிநிதிகளுடனான இரண்டு நாள் மாநில அளவிலான ஆலோசனைக் கூட்டத்தை 8-வது ஊதியக் குழு சென்னையில் நடத்தியது. நேற்று (செப்டம்பர் 7) மற்றும் நேற்று முன்தினம் (செப்டம்பர் 8) நடந்த இக்கூட்டத்தில், ஊழியர் அமைப்புகள் தங்களது கோரிக்கைகள், ஊதிய முரண்பாடுகள் மற்றும் அகவிலைப்படி சீரமைப்பு குறித்த கருத்துகளைக் குழுவிடம் நேரடியாக அளித்தன. சென்னை கூட்டத்தைத் தொடர்ந்து, செப்டம்பர் 9 அன்று புதுச்சேரியிலும் இந்த ஆலோசனைக் கூட்டம் தொடர்கிறது.

எத்தனை பேர் பயன் அடைவார்கள்

மத்திய அரசு வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ் தகவல்களின்படி, 2026 மார்ச் 1 நிலவரப்படி இந்தியாவில் சுமார் 35.77 லட்சம் சிவில் மத்திய அரசு ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். அதேபோல், பாதுகாப்புத் துறையைத் தவிர்த்து 2025 டிசம்பர் 31 நிலவரப்படி சுமார் 33.76 லட்சம் ஓய்வூதியதாரர்களும் குடும்ப ஓய்வூதியதாரர்களும் உள்ளனர். இந்த ஊதியக் குழுவின் பரிந்துரைகள் அமலுக்கு வரும்போது, ஓய்வூதியதாரர்கள் மற்றும் பணியாளர்கள் என ஒட்டுமொத்தமாக ஒரு கோடிக்கும் அதிகமானோர் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஊதிய உயர்வு நிலவரம்

ஊழியர்கள் மத்தியில் 8-வது ஊதியக் குழுவின் ‘ஃபிட்மென்ட் ஃபேக்டர்’ எவ்வளவு இருக்கும் என்ற மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. 6-வது ஊதியக் குழுவில் 1.86 ஆகவும், 7-வது ஊதியக் குழுவில் 2.57 ஆகவும் இருந்த இந்த காரணி, 8-வது ஊதியக் குழுவில் மேலும் அதிகரிக்கக்கூடும் என ஊகங்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், மத்திய அரசோ அல்லது ஊதியக் குழுவோ இதுகுறித்து இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ முடிவையோ அல்லது இறுதியான ஊதிய உயர்வு அளவையோ அறிவிக்கவில்லை. எனவே, இணையதளங்களில் உலா வரும் அதிகாரப்பூர்வமற்ற எண்களை ஊழியர்கள் நம்ப வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மத்திய அரசால் 2025 நவம்பர் 3 அன்று அமைக்கப்பட்ட இந்த 8-வது ஊதியக் குழுவிற்கு, தனது இறுதி பரிந்துரை அறிக்கையைச் சமர்ப்பிக்க 18 மாத காலம் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இதன்படி, 2027 ஆம் ஆண்டு மே அல்லது ஜூன் மாதத்திற்குள் இக்குழு தனது பரிந்துரைகளை அரசிடம் வழங்கிவிடும் எனக் கருதப்படுகிறது. அரசாங்கம் அறிக்கையைப் பரிசீலித்து இறுதி முடிவெடுத்த பின்னரே புதிய ஊதியக் கட்டமைப்பு அமலுக்கு வரும் தேதியும் அரியர்ஸ் விவரங்களும் அதிகாரப்பூர்வமாகத் தெரியவரும்.

SCROLL FOR NEXT