சுதந்திர தின விழாவையொட்டி சென்னை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு அமல்படுத்தப்பட்டுள்ளது. பயணிகள் முன்கூட்டியே வரவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
நாட்டின் 80-வது சுதந்திர தின விழா வருகிற 15-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இன்று முதல் வருகிற 20-ந் தேதி நள்ளிரவு வரை 5 அடுக்கு பாதுகாப்பு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே அமலில் இருந்த 3 அடுக்கு பாதுகாப்பு, தற்போது 5 அடுக்காக பலப்படுத்தி, விமான நிலையம் முழு பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டு உள்ளது.
இதையொட்டி பயணிகள் மற்றும் அவர்களது உடைமைகள் தீவிர சோதனை செய்யப்பட்டு வருகிறது. பயணிகள் கையில் எடுத்துச் செல்லும் உடைமைகளில் திரவப்பொருட்கள், ஜாம், அல்வா, ஊறுகாய், எண்ணெய் பாட்டில்கள் உள்ளிட்ட பொருட்களை எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரர்கள், வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய்கள் உதவியுடன் விமான நிலைய நுழைவாயில், விமானங்கள் நிறுத்தும் பகுதிகள் என விமான நிலைய வளாகம் முழுவதும் தீவிர சோதனை மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். துப்பாக்கி ஏந்திய பாதுகாப்புப் படையினரும் தொடர்ந்து ரோந்து வருகின்றனர்.
பாதுகாப்பு பணியில் ஈடுபடுபவர்கள் 20-ந் தேதி வரையில் விடுமுறை எடுக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. விமான நிலையத்தின் வெளி பகுதியில் சென்னை மாநகர போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு உள்ளனர்.
விமான நிலையம் வரும் வாகனங்கள் மற்றும் பயணிகள் பலத்த சோதனைக்கு பின்னரே உள்ளே செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள். பார்வையாளர்களுக்கு கடந்த சில ஆண்டுகளாக தடை அமுலில் உள்ளது. முக்கிய பிரமுகர்களை வரவேற்க, வழி அனுப்ப வருபவர்களுக்கு சிறப்பு பாஸ்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
கூடுதல் பாதுகாப்பு சோதனைகள் காரணமாக உள்நாட்டு பயணிகள் விமானம் புறப்படும் நேரத்துக்கு 1½ மணி நேரத்துக்கு முன்னதாகவும், பன்னாட்டு பயணிகள் 35 மணி நேரத்துக்கும் முன்பாகவும் விமான நிலையத்துக்கு வருமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
மேலும் விமான நிலைய வளாகம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் டிரோன்கள் பறக்க விடுதல், அதிக சக்தி கொண்ட லேசர் விளக்குகளை பயன்படுத்துதல், கியாஸ் நிரப்பிய பலூன்களை பறக்க விடுதல் ஆகியவற்றுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை தொடர்ந்து அமலில் இருக்கும் என்றும், இதனால் பயணிகள் அச்சப்பட வேண்டாம். பாதுகாப்பு சோதனைகளுக்கு பயணிகள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.