திருவள்ளூர் மாவட்டம் ஆவடியை அடுத்த பிருந்தாவன் நகரைச் சேர்ந்தவர் முருகன். இவரது 8 வயது மகன் நிச்சிஷ், ஆவடி கவுரிப்பேட்டை பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 4-ஆம் வகுப்பு படித்து வந்தான். நேற்று காலையில் நிச்சிஷ் தனது வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது மின்சாரம் இல்லாததால் வீட்டின் உட்பகுதி இருட்டாக இருந்துள்ளது.
இந்நிலையில், திடீரென வீட்டில் இருந்த வளர்ப்புப் பூனை பயங்கரமாகச் சத்தமிட்டு கத்தியுள்ளது. பூனைக்கு ஏதோ ஆபத்து என்பதை உணர்ந்த நிச்சிஷ், அதனைத் தூக்குவதற்காக அருகில் சென்றுள்ளான். அப்போது, பூனையைத் தாக்க வந்த விஷப்பாம்பு ஒன்று எதிர்பாராதவிதமாக சிறுவன் நிச்சிஷைக் கடித்தது.
பாம்பு கடித்ததில் வலியால் அலறித்துடித்த சிறுவனை, அவனது பெற்றோர் மற்றும் அண்டை வீட்டார் உடனடியாக மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். எனினும், மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே சிறுவன் பரிதாபமாக உயிரிழந்ததாக அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இச்சம்பவம் குறித்து ஆவடி டேங்க் பேக்டரி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் பாம்பு கடித்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.