தமிழக செய்திகள்

திருச்சியில் சாலை விபத்தில் 8 பேர் பலி - முதலமைச்சர் விஜய் இரங்கல்

4 பேர் சிகிச்சைக்காக முசிறி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

முசிறி அருகே சாலை விபத்தில் 8 பேர் பலியான செய்தி அறிந்து மிகுந்த வருத்தமும், வேதனையும் அடைந்ததாக முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார்.

திருச்சி மாவட்டம் துறையூர் - முசிறி சாலையில் ஜெம்புநாதபுரம் அருகே நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை கார் ஒன்று மரத்தின் மீது மோதிய விபத்தில், அதில் பயணித்த 8 பேர் உயிரிழந்தனர்.

விபத்து

மாணிக்கம், சங்கிலி, முருகன், ராஜேஷ், பாவாடை ஆகிய 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

படுகாயமடைந்த சக்திவேல், சுப்பிரமணி உள்ளிட்ட 4 பேர் சிகிச்சைக்காக முசிறி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

ஆனால் சிகிச்சை பலனின்றி சக்திவேல், சுப்ரமணி, சீதாராமன் ஆகிய 3 பேர் மருத்துவமனையில் உயிரிழந்தனர்.

முதலமைச்சர் விஜய்

இந்நிலையில் இந்த சம்பவத்திற்கு முதலமைச்சர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "திருச்சிராப்பள்ளி மாவட்டம், துறையூர் - முசிறி நெடுஞ்சாலையில் கொத்தூர்பட்டி நால்ரோடு அருகில் கார் மரத்தில் மோதிய விபத்தில், அக்காரில் பயணம் செய்த தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி, மகாராஜபுரத்தைச் சேர்ந்த திரு.ஆ.சக்திவேல் (வயது 45) உள்ளிட்ட ஐந்து நபர்கள் நிகழ்விடத்திலேயும், படுகாயங்களுடன் முசிறி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி மூன்று நபர்களும் என மொத்தம் எட்டு நபர்கள் உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தி அறிந்து மிகுந்த வருத்தமும், வேதனையும் அடைந்தேன்.

இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

மேலும், இவ்விபத்தில் படுகாயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இரண்டு நபர்களுக்கு உயரிய சிகிச்சை வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்." என குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் மோடி இரங்கல்

இந்த விபத்துக்கு இரங்கல் தெரிவித்த பிரதமர் மோடி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50 ஆயிரமும் நிதியுதவியாக வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT