தமிழக செய்திகள்

தென் மாவட்டங்களில் 745 பேர் குண்டர் சட்டத்தில் கைது

கொலை உள்ளிட்ட குற்றச் சம்பவங்களில் ஈடுபடக்கூடிய நபர்களை முன்கூட்டியே கண்காணித்து, தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தென் மாவட்டங்களில் இதுவரை 745 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றவாளிகள் மீதான சட்ட நடவடிக்கைகள் மட்டுமின்றி, குற்றத்தடுப்பு நடவடிக்கைகளும் தொடர்ந்து தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.

தென் மாவட்டம்

நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்களுக்கு எதிராக காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுத்து வருவதாக தென்மண்டல போலீஸ் ஐ.ஜி. விஜயேந்திர பிதாரி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தென் மாவட்டங்களில் குற்றச் சம்பவங்களை கட்டுப்படுத்தும் வகையில் தொடர்ந்து கண்காணிப்பு மற்றும் சட்டரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடந்த 2021-ம் ஆண்டு 469 கொலைகளும், 2022-ம் ஆண்டு 526 கொலைகளும், 2023-ம் ஆண்டு 497 கொலைகளும், 2024-ம் ஆண்டு 470 கொலைகளும், 2025-ம் ஆண்டு 471 கொலைகளும் தென் மாவட்டங்களில் நடைபெற்றுள்ளது. 2026-ம் ஆண்டு செப்டம்பர் 30-ந்தேதி வரை அதாவது நேற்று வரை 352 கொலைகள் நடந்துள்ளன.

வழக்கு

கொலை உள்ளிட்ட குற்றச் சம்பவங்களில் ஈடுபடக்கூடிய நபர்களை முன்கூட்டியே கண்காணித்து, தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடந்த 5 ஆண்டுகளில் ஒப்பீட்டளவில் குற்றங்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்களை கண்காணித்து, 6,248 பேர் மீது தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், குற்ற வழக்குகளில் ஈடுபடும் நபர்களுக்கு எதிராக தொடர்ந்து சட்டரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஜாமீன் ரத்து

தொடர் குற்றங்களில் ஈடுபடும் நபர்கள் மற்றும் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக 11,185 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், 955 குற்றவாளிகளின் ஜாமீன் ரத்து செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குண்டர் தடுப்புச் சட்டம்

அதேபோல், நிலுவையில் இருந்த வழக்குகளில் நீதிமன்ற நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி, 19,488 பிடிவாரண்ட்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. தொடர் குற்றங்களில் ஈடுபடும் நபர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, தென் மாவட்டங்களில் இதுவரை 745 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குற்றவாளிகள் மீதான சட்ட நடவடிக்கைகள் மட்டுமின்றி, குற்றத்தடுப்பு நடவடிக்கைகளும் தொடர்ந்து தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT