காஞ்சீபுரம் காமாட்சி அம்மன் சன்னதி தெருவில் தனியார் மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில் காலில் காயமடைந்து படுக்கையில் இருந்த நோயாளி, ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மற்றும் உறவினர்கள் உள்ளிட்ட 7 பேர் 2-வது மாடியில் இருந்து தரைத்தளத்திற்கு லிப்ட் மூலம் இறங்கிக் கொண்டிருந்தனர்.
அப்போது கனமழை காரணமாக திடீரென மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் லிப்ட் பாதியிலேயே நின்றது. இதன் காரணமாக லிப்டில் இருந்தவர்கள் அச்சமடைந்து பாதுகாப்புப் பணியாளர்களுக்குத் தகவல் தெரிவித்தனர். நீண்ட நேரமாக முயற்சி செய்தும் அவர்களை மீட்க முடியாததால், தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், லிப்ட் கதவை உடைத்து, உள்ளே சிக்கியிருந்த 7 பேரையும் ஒவ்வொருவராகப் பாதுகாப்பாக மீட்டனர்.
இதற்கிடையே, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த டி.எஸ்.பி. தலைமையிலான போலீசார், எவ்வித அசம்பாவிதமும் ஏற்படாத வகையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.