தூத்துக்குடி மாவட்டம் கந்தன் காலனி பகுதியில், வீட்டில் தனியாக இருந்த சசிகலா என்ற பெண்மணி ஒருவர் மர்ம கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை மேற்கோள் காட்டி, தவெக அரசுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில் கூறப்பட்டுள்ளதாவது;
“தூத்துக்குடி கந்தன் காலனியில் வீட்டில் தனியாக இருந்த சசிகலா எனும் பெண்மணி வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
தூத்துக்குடியில் 4 நாட்களில் 7 கொலைகள்!
இதற்கு என்ன விநோத விளக்கத்தை மாவட்டக் காவல்துறையினர் வெளியிடப் போகின்றனர்?
வெளியில்தான் பாதுகாப்பில்லை, நிம்மதியாக யாரும் நடமாட முடியவில்லை என்று பார்த்தால், வீட்டுக்குள் இருக்கவே அச்சமடையும் நிலைக்கு மக்களைத் தள்ளியதுதான் த.வெ.க.வின் சாதனையா?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
வீட்டில் தனியாக இருந்த பெண்ணை தலை மற்றும் தோள்பட்டையில் கொடூரமாக வெட்டி கொலை செய்துவிட்டு மர்ம கும்பல் தப்பியுள்ளது. அப்பகுதிகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
அவரது கழுத்தில் இருந்த 4 சவரன் தங்க நகையையும் மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றதாக கூறப்படுகிறது.
வீட்டிற்கு வந்த மகன், தன் தாய் இறந்து கிடப்பதை பார்த்து தென்பாகம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார். போலீசார் தற்போது வழக்குப் பதிவு செய்து, கொலையில் ஈடுபட்ட மர்ம நபர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.