தமிழக செய்திகள்

ஒட்டன்சத்திரம் அருகே ஓய்வுபெற்ற மின்வாரிய அலுவலர் வீட்டில் 60 பவுன் நகை கொள்ளை

குடியிருப்பு பகுதியில் நடைபெற்றுள்ள இந்தத் துணிகரக் கொள்ளை சம்பவம் மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஒட்டன்சத்திரம் நல்லா கவுண்டர் நகரைச் சேர்ந்தவர் காளிமுத்து. ஓய்வு பெற்ற மின் வாரிய அலுவலரான இவர், நேற்று இரவு தனது குடும்பத்தினருடன் திருச்செந்தூர் கோவிலுக்குச் சென்றிருந்தார். வீடு பூட்டப்பட்டிருப்பதை நோட்டமிட்ட மர்ம நபர்கள், நள்ளிரவில் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். பின்னர் அங்கிருந்த பீரோவை உடைத்து, அதில் வைக்கப்பட்டிருந்த சுமார் 60 பவுன் தங்க நகைகள் மற்றும் 40 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

இன்று காலை வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (SP) பிரதீப், கொள்ளை நடைபெற்ற வீட்டை நேரில் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டார். மேலும், தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, கொள்ளையர்களின் கைரேகைகள் மற்றும் இதர தடயங்கள் சேகரிக்கப்பட்டன. மோப்ப நாய் வரவழைக்கப்பட்டும் சோதனை நடத்தப்பட்டது.

தற்போது குடும்பத்தினர் ஊரில் இல்லாததால், அவர்கள் வந்த பிறகுதான் கொள்ளை போன நகைகள் மற்றும் பணத்தின் சரியான மதிப்பு தெரியவரும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குடியிருப்பு பகுதியில் நடைபெற்றுள்ள இந்தத் துணிகரக் கொள்ளை சம்பவம் மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.