அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, எஸ்.பி. வேலுமணி ஆதரவாளர்கள் 6 பேரை கட்சியில் இருந்து நீக்கி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். கட்சியின் கொள்கைக்கு முரணான செயல்பாடுகள் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அவர் அறிவித்துள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தலுக்கு பின் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கும் இடையே பனிப்போர் நீடித்து வருகிறது.
இந்தநிலையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி ஆதரவாளர்கள் சிலரை அ.தி.மு.க.வில் இருந்து நீக்கி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டு இருக்கிறார். இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கழகத்தின் கொள்கை- குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு கழகத்தின் ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும், அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும் கீழ்க்கண்ட நிர்வாகிகள் இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்கள்.
கோவை புறநகர் மத்திய மாவட்டத்தைச் சேர்ந்த மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு இணை செயலாளர் சபரிவிக்ரம், குறிச்சி பகுதி தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் சுரேஷ்கு மார் தாஸ, போத்தனூர் மேட்டூர் ரோடு வேணு கோபால், போத்தனூர் சீனிவாசன் நகர் பரத்குமார், 98-வது வட்ட முன்னாள் செயலாளர் சேகர், குனியமுத்தூர் பகுதி இடையர்பாளையம் எம்.ஜி.ஆர். நகர் பிரபாகரன் ஆகியோர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். கழக உடன்பிறப்புகள் யாரும் இவர்களுடன் எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி அறிக்கையில் கூறி உள்ளார். எடப்பாடி பழனிசாமியின் இந்த அறிவிப்பால் கோவை மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தலைமையின் அனுமதியின்றி ஊடகங்களில் யாரும் கருத்து தெரிவிக்க கூடாது என சமீபத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு பிறப்பித்து இருந்தார். இந்த உத்தரவை விமர்சித்து வேலுமணியின் ஆதரவாளர்கள் அவருக்கு ஆதரவாகவும், எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகவும் பதிவிட்டதாக கூறப்படுகிறது. அதனால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.