தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி 45 நாட்கள் முடிந்துள்ள நிலையில் போதுமான மழைப்பொழிவு இதுவரையில் இல்லை. அக்டோபர் மாதம் சராசரியாக கிடைக்க வேண்டிய 17 செ.மீ. மழை பெய்தது.
ஆனால் நவம்பர் மாதத்தில் செய்ய வேண்டிய 18 செ.மீ. மழை பற்றாக்குறையாக உள்ளது. போதுமான அளவு தமிழகத்தில் பருவமழை பெய்யாததால் ஏரி, குளங்கள் வறண்டு கிடக்கின்றன. இந்த நிலையில் நாளை 29-ந்தேதி தெற்கு அந்தமான் கடல் பகுதியில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாக வாய்ப்பு உள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சுமார் 1.5 கி மீ உயரம் வரை லட்சத்தீவின் தெற்குப் பகுதிகளிலிருந்து மத்தியக்கிழக்கு அரபிக்கடல் வழியாக கடலோர கர்நாடகா வரை ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது.
இதன் காரணமாக நீலகிரி, கோயம்புத்தூர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும்.
திருப்பூர், ஈரோடு, கடலூர், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தேனி மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவையிலும் லேசான மழை பெய்யக்கூடும்," என தெரிவிக்கப்பட்டுள்ளது.