தமிழக செய்திகள்

தாளவாடியில் 5 மாத பெண் குழந்தை திடீர் மரணம்- போலீசார் விசாரணை

கடந்த ஒரு வாரமாக குழந்தைக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டதாகவும், இதற்காக தாளவாடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாகவும் கூறப்படுகிறது.

ஈரோடு மாவட்டம் தாளவாடியில் 5 மாத பெண் குழந்தை திடீரென மூச்சுத் திணறலால் உயிரிழந்தது. மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஈரோடு மாவட்டம் தாளவாடி திப்பு சர்க்கிள் பகுதியில் வசித்து வருபவர் ஸ்ருதி (22). இவருக்கு கர்நாடகா மாநிலம் கொள்ளேகால் பகுதியை சேர்ந்த கீரிஷா என்பவருடன் திருமணமாகி 8 ஆண்டுகள் ஆகின்றன. இவர்களுக்கு லட்சுமி (7) என்ற பெண் குழந்தை உள்ளது.

இந்நிலையில், கடந்த 5 மாதங்களுக்கு முன்பு கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் சுருதிக்கு 2-வது பெண் குழந்தை பிறந்தது. தற்போது தாளவாடியில் வசித்து வந்தனர்.

கடந்த ஒரு வாரமாக குழந்தைக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டதாகவும், இதற்காக தாளவாடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாகவும் கூறப்படுகிறது.

மூச்சுத் திணறல்

இந்த நிலையில், நேற்று மதியம் சுமார் 3 மணியளவில் வீட்டில் இருந்த குழந்தை திடீரென மூச்சுப் பேச்சின்றி இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் குழந்தையை உடனடியாக தாளவாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

அங்கு குழந்தையைப் பரிசோதித்த டாக்டர்கள், குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து மருத்துவமனை சார்பில் தாளவாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் அரவிந்த் ராஜன் மருத்துவமனைக்குச் சென்று விசாரணை நடத்தினார். மேலும், இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து, குழந்தையின் இறப்புக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

SCROLL FOR NEXT