தமிழக செய்திகள்

கல்லூரி மாணவரை காரில் கடத்திய சக மாணவர்கள் 5 பேர் கைது

அபுபக்கர் சித்திக் இறக்கி விடப்பட்ட தகவல் அறிந்து போலீசார் இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு சென்றனர்.

சென்னை ராயப்பேட்டையை சேர்ந்தவர் சாய்திலக். தி.நகர் பாண்டிபஜார் பகுதியை சேர்ந்தவர் அபு பக்கர் சித்திக். இவர்கள் இருவரும் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வந்தனர். நேற்று இரவு இவர்கள் இருவரும் அந்த கல்லூரி அருகே காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது பின்னால் மற்றொரு காரில் வந்த 5 பேர் அவர்களை தடுத்து நிறுத்தினர். அவர்கள் சாய் திலக் மற்றும் அபுபக்கர் சித்திக் ஆகிய இருவரையும் தங்களது காரில் ஏறுமாறு மிரட்டினார்கள். இதையடுத்து சாய்திலக் அங்கிருந்து தப்பி ஓடினார். அபுபக்கர் சித்திக்கை அந்த 5 பேரும் சேர்ந்து தங்களது காரில் ஏற்றி கடத்தி சென்றனர்.

போலீசார்

இதைபார்த்த வாகன ஓட்டிகள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தப்பி சென்ற சாய்திலக்கும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து நுங்கம்பாக்கம் போலீசார், மாணவரை கடத்தி சென்ற காரை கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டனர். இதற்கிடையே அபுபக்கர் சித்திக்கை காரில் கடத்தியவர்கள் இரவு 7 மணி முதல் 9.30 மணி வரை அவரை காரிலேயே வைத்து சுற்றிக் கொண்டிருந்தனர். பின்னர் கே.கே. நகர் இ.எஸ்.ஐ. மருத்துவமனை அருகே அவரை தாக்கி கீழே இறக்கி விட்டு தப்பி சென்றுவிட்டனர். 5 பேரும் தாக்கியதில் அவரது பல் உடைந்தது. அபுபக்கர் சித்திக் இறக்கி விடப்பட்ட தகவல் அறிந்து போலீசார் இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு சென்றனர்.

மருத்துவமனை

மாணவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் அந்த மாணவரிடம் போலீஸ் விசாரணை நடத்தினார்கள். அப்போது அபுபக்கர் சித்திக்கை கடத்தியது அவருடன் படிக்கும் சக மாணவர்கள் என்று தெரியவந்தது. 2 மாதங்களுக்கு முன்பு சென்னை பாண்டிபஜாரில் உள்ள தனியார் மதுபான விடுதியில் ஏற்பட்ட மோதல் காரணமாக மாணவர் சுதன் என்பவர், தனது நண்பர்களுடன் சேர்ந்து மாணவர் அபுபக்கர் சித்திக்கை காரில் கடத்தி சென்று தாக்கியது தெரியவந்தது. இதையடுத்து மாணவர் சுதன், அவரது நண்பர்கள் அம்ரித், கனிஷ்க், அபுபக்கர் உள்பட 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

SCROLL FOR NEXT