நாகர்கோவில்:
நாகர்கோவிலில் மாவட்ட நீதிமன்ற சாலையில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் செயல்பட்டு வருகிறது. இதில் மாவட்ட நீதிமன்ற அலுவலகம் மற்றும் மாவட்ட சமரச மையத்திற்கு இன்று இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. அதில் இன்று 2 இடங்களில் வெடிகுண்டு வெடிக்கும் என்று கூறப்பட்டிருந்தது. இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன்பேரில் போலீசார், வெடிகுண்டு நிபுணர்களுடன் விரைந்து வந்து மாவட்ட நீதிமன்ற அலுவலகம் மற்றும் சமரச தீர்வு மையத்தில் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனை நடத்தினர். மோப்ப நாய் வரவழைக்கப்பட்டும் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையின்போது மாவட்ட நீதிமன்ற அலுவலக ஊழியர்கள் வெளியேற்றப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. கோர்ட்டு வளாகத்தில் நிறுத்தப்பட்டு இருந்த கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களிலும் சோதனை நடந்தது.
அனைத்து கோர்ட்டுகளிலும் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக இந்த சோதனை நீடித்தது. ஆனால் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. வெடிகுண்டு மிரட்டல் காரணமாக கோர்ட்டில் அலுவலக பணிகள் பாதிக்கப்பட்டன. ஒரு சில கோர்ட்டுகளில் வழக்கு விசாரணைகள் ஒத்தி வைக்கப்பட்டன. வெடிகுண்டு மிரட்டல் விடுத்த இ-மெயில் எங்கிருந்து வந்தது? என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
கடந்த ஒரு மாதத்தில் 4-வது முறையாக கோர்ட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.