தமிழக செய்திகள்

வண்டலூர் உயிரியல் பூங்காவை 2 நாளில் 40 ஆயிரம் பேர் இலவசமாக பார்வையிட்டனர்

வேலூர் அமிர்தி மற்றும் சேலம் குரும்பட்டி உயிரியல் பூங்காவையும் இன்று திங்கட்கிழமை இலவசமாக சுற்றி பார்க்க அனுமதிக்கப்பட்டு உள்ளது.

முதலமைச்சர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு வண்டலூர் உயிரியல் பூங்காவை பார்வையிட பொதுமக்களுக்கு நேற்று இலவச அனுமதி வழங்கப்பட்டது. முன்பதிவு செய்தவர்கள் பூங்காவை இலவசமாக பார்வையிட்டனர்.

இன்று ஏராளமான பொதுமக்கள் பூங்காவில் விலங்குகளை இலவசமாக பார்த்து மகிழ்ந்தனர். 2 நாட்களிலும் வண்டலூர் உயிரியல் பூங்காவை பார்வையிட 40 ஆயிரம் பேர் முன்பதிவு செய்து இருந்தனர். நேற்று பூங்காவுக்கு தமிழக வனத்துறை அமைச்சர் ஆர்.வீ.ரஞ்சித் குமார், மனித வள மேலாண்மை துறை அமைச்சர் சரத்குமார், செங்கல்பட்டு தொகுதி எம்.எல்.ஏ. எஸ்.தியாகராஜன் ஆகியோர் வந்தனர். அவர்கள் பூங்காவுக்கு வந்திருந்த குழந்தைகளுக்கு முதலமைச்சர் விஜய் பிறந்த நாளை முன்னிட்டு சாக்லேட்டுகளை வழங்கினார்கள். பின்னர் பேட்டரி வாகனம் மூலம் வண்டலூர் உயிரியல் பூங்காவை சுற்றி பார்த்து பொதுமக்களுக்கு செய்யப்பட்டுள்ள வசதிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர்.

முதலமைச்சர் விஜய் பிறந்த நாளை முன்னிட்டு பூங்காவை பொதுமக்கள் இலவசமாக பார்வையிடுவதற்கான கட்டணம் ரூ.80 லட்சத்தை அமைச்சர் ஆர்.வீ.ரஞ்சித்குமார் தனது சொந்த செலவில் அறக்கட்டளை மூலம் வனத்துறை தலைவர் சீனிவாச ரெட்டியிடம் வழங்கினார். பின்னர் வனத்துறை அமைச்சர் ஆர்.வீ.ரஞ்சித் குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

முதலமைச்சர் விஜய் பிறந்த நாளை முன்னிட்டு 2 நாட்களுக்கு 40 ஆயிரம் பேர் முன்பதிவு செய்யப்பட்டு வண்டலூர் உயிரியல் பூங்காவை பார்வையிட அனுமதிக்கப்பட்டனர். இதன் மூலம் பூங்கா நிர்வாகம் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக முன்பதிவு செய்த 40 ஆயிரம் பேருக்கான கட்டணம் ரூ.80 லட்சத்தை எனது சொந்த பணத்தில் காசோலையாக வழங்கியுள்ளேன்.

இதே போல வேலூர் அமிர்தி மற்றும் சேலம் குரும்பட்டி உயிரியல் பூங்காவையும் இன்று திங்கட்கிழமை இலவசமாக சுற்றி பார்க்க அனுமதிக்கப்பட்டு உள்ளது. பார்வையிட்டவர்களின் எண்ணிக்கை விவரம் வந்த பிறகு அதற்கான நுழைவு கட்டண தொகையை விரைவில் எனது சொந்த செலவில் இருந்து வழங்குவேன் என்றார்.