தமிழக செய்திகள்

பல்லி விழுந்த உணவை சாப்பிட்ட 40 மாணவ-மாணவிகளுக்கு பாதிப்பு: ஆஸ்பத்திரியில் அனுமதி

மாணவர்கள் அனைவரும் ஆம்புலன்ஸ் மூலம் திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் கவிதா ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற மாணவ-மாணவிகளை சந்தித்து நலம் விசாரித்து ஆறுதல் கூறினார்.

திருவள்ளூர் அடுத்த மப்பேடு அருகே உள்ள கொட்டையூர் கிராமத்தில் அரசினர் நடுநிலை பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் மொத்தம் 55 மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள்.

இன்று காலை மாணவ-மாணவிகளுக்கு கிச்சடி சிற்றுண்டி வழங்கப்பட்டது. அப்போது அவர்களுக்கு வழங்கப்பட்ட குழம்பில் பல்லி இறந்து கிடந்தது. இதனை கண்ட ஊழியர்கள் மாணவர்கள் உணவு சாப்பிடுவதை தடுத்தனர். இதற்கிடையே பல்லி விழுந்த உணவு சாப்பிட்ட 40 மாணவ-மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதனால் பள்ளியில் பரபரப்பு ஏற்பட்டது.

உடனடியாக மாணவர்கள் அனைவரும் ஆம்புலன்ஸ் மூலம் திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது மாணவ-மாணவிகள் அனைவரும் நலமுடன் உள்ளனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் கவிதா ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற மாணவ-மாணவிகளை சந்தித்து நலம் விசாரித்து ஆறுதல் கூறினார். மேலும் சிகிச்சை குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தார்.

இதற்குள் மாணவ-மாணவிகளின் பெற்றோரும் குவிந்ததால் பரபரப்பாக காணப்பட்டது. மாணவர்களுக்கு வழங்கப்பட்ட உணவில் பல்லி விழுந்தது எப்படி? என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

SCROLL FOR NEXT