திற்பரப்பு அருவியில் தொடர்ந்து தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால், சுற்றுலா பயணிகள் குளிக்க இன்று 6-வது நாளாக தடை நீடிக்கிறது.
குமரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று இரவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்த நிலையில், இன்று காலையில் வழக்கம்போல் வெயில் அடித்தது.
நாகர்கோவிலில் நேற்று இரவு சாரல் மழை பெய்தது. அதேவேளையில் மயிலாடி பகுதியில் மழை கொட்டி தீர்த்தது. அங்குதான் மாவட்டத்தில் அதிகபட்சமாக 36.2 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. கொட்டாரம், சுருளோடு பகுதிகளிலும் மழை நீடித்தது.
54.12 அடி முழு கொள்ளளவு கொண்ட மாம்பழத்துறையாறு அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 52.08 அடியை எட்டியுள்ளது. இன்னும் இரு தினங்களில் இந்த அணை முழு கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. அணைக்கு 820 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
அதேபோல் பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 52.90 அடியாக உள்ளது. அணைக்கு 760 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. நாகர்கோவில் நகரத்திற்கு குடிநீர் சப்ளை செய்ய பயன்படுத்தப்படும் முக்கடல் அணையின் நீர்மட்டம் இன்று காலை 17.10 அடியாக உள்ளது.
மலையோர பகுதியான பாலமோர் பகுதியில் மழை குறைந்ததன் காரணமாக அணைகளுக்கு மிதமான அளவே தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
மேலும் குழித்துறை ஆறு, பழையாறு மற்றும் வள்ளியாறு உள்ளிட்ட ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கும் படிப்படியாக குறைந்து வருகிறது. திற்பரப்பு அருவியில் தொடர்ந்து தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால், சுற்றுலா பயணிகள் குளிக்க இன்று 6-வது நாளாக தடை நீடிக்கிறது.
தொடர் மழையின் காரணமாக மாவட்டத்தின் பல்வேறு தாழ்வான பகுதிகள், குடியிருப்புகள் மற்றும் தென்னந்தோப்புகளில் தண்ணீர் சூழ்ந்துள்ளது. சொத்தவிளை பகுதியில் தென்னந்தோப்புகளுக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளது. எனினும் குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம் தற்போது வடிய தொடங்கி உள்ளது.
மழை காரணமாக மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. கருங்கல் அருகே தொலையா வட்டம் பகுதியில் பழைய வீடு ஒன்று இடிந்து விழுந்தது. அருமனை அருகே மஞ்சாலுமூடு பகுதியில் மழைக்கு மண்சரிவு ஏற்பட்டு, பெரிய பாறாங்கல் உருண்டு வந்து வீட்டின் மீது விழுந்ததில் ஒரு வீட்டின் சமையலறை சேதமடைந்தது.
மழை காரணமாக நேற்று ஒரே நாளில் மாவட்டம் முழுவதும் 10 வீடுகள் இடிந்துள்ளன. கடந்த ஒரு வாரமாகப் பெய்து வரும் கனமழைக்கு மாவட்டம் முழுவதும் இதுவரை 40-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.