தமிழக செய்திகள்

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

இன்று முதல் 13-ந்தேதி வரையிலான 6 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளது.

தமிழ்நாட்டில் கோடை வெயில் கொளுத்தி வரும் சூழலில், ஆங்காங்கே அவ்வப்போது கோடை மழையும் பெய்து வருகிறது. இந்த சூழலில் கொளுத்தும் வெயிலுக்கு இதமாக கோடை மழை தமிழ்நாட்டில் பரவலாக பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனையொட்டிய லட்சத்தீவு பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சி, தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனையொட்டிய லட்சத்தீவு பகுதிகளில் இருந்து தென்மேற்கு மத்திய பிரதேசம் வரை உள்கர்நாடகா மற்றும் மராட்டியம் வழியாக வளிமண்டல காற்றழுத்த தாழ்வுப்பாதை நிலவுவதால் இந்த மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்று முதல் 13-ந்தேதி வரையிலான 6 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், இன்று தமிழ்நாட்டில் சில இடங்களிலும், புதுச்சேரியில் இடி மின்னலுடன் மிதமான மழையும், நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், மதுரை, தேனி, தென்காசி, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டி னம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை ஆகிய 19 மாவட்டங்களிலும், காரைக்கால் பகுதியிலும் ஓரிரு இடங்களிலும் பலத்த காற்று, இடி மின்னலுடன் கனமழையும் பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் அடுத்த 3 மணி நேரத்திற்கு சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.