தமிழக செய்திகள்

387-வது மெட்ராஸ் தினம்: ‘சென்னை டு மெட்ராஸ்’ சிறப்பு புகைப்படக் கண்காட்சி தொடக்கம்- அமைச்சர்கள் திறந்து வைத்தனர்!

22.08.2026 முதல் 31.08.2026 வரை நடைபெறும் இக்கண்காட்சியைப் பொதுமக்கள், மாணவர்கள், கலை ஆர்வலர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் இலவசமாகப் பார்வையிடலாம்.

சென்னையின் தொன்மையான வரலாறு, செழுமையான பாரம்பரியம் மற்றும் பண்பாட்டை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் வகையில் 387-வது மெட்ராஸ் தினக் கொண்டாட்டங்களை தமிழ்நாடு சுற்றுலாத்துறை மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் இணைந்து சிறப்பாக முன்னெடுத்து வருகின்றன.

இதன் முக்கிய நிகழ்வாக, சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில், “சென்னை முதல் மெட்ராஸ்” என்ற தலைப்பிலான சிறப்பு புகைப்படக் கண்காட்சியை பள்ளிக் கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் ராஜ்மோகன் மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர் செ.ராஜேஷ்குமார் ஆகியோர் இன்று (22.08.2026) திறந்து வைத்து பார்வையிட்டனர்.

கருப்பு-வெள்ளை புகைப்படங்களின் அரிதான தொகுப்பு

சர்வதேசப் புகழ்பெற்ற புகைப்படக் கலைஞர் டாக்டர் எல்.ராமச்சந்திரன், கொரோனா ஊரடங்கு காலத்தில் சென்னையின் பல்வேறு பகுதிகளில் பதிவு செய்த அரிதான கருப்பு-வெள்ளை புகைப்படங்களின் சிறப்புத் தொகுப்பு இக்கண்காட்சியின் முதன்மைச் சிறப்பம்சமாகும். இவை சென்னையின் வரலாற்றுச் சிறப்புமிக்க கட்டிடக்கலை, நகரின் தனித்துவமான அடையாளங்கள் மற்றும் பண்பாட்டு மரபுகளை கலைநயத்துடன் வெளிப்படுத்துகின்றன. 22.08.2026 முதல் 31.08.2026 வரை நடைபெறும் இக்கண்காட்சியைப் பொதுமக்கள், மாணவர்கள், கலை ஆர்வலர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் இலவசமாகப் பார்வையிடலாம்.

பாரம்பரிய நடைப்பயணங்கள்

மெட்ராஸ் தினத்தை முன்னிட்டு சுற்றுலாத் துறை சார்பில் ‘மெட்ராஸ் போட்டோ பிளாகர்ஸ்’ இணைந்து நடத்திய புகைப்படப் போட்டி, ‘இன்ஸ்டாகிராம் மெட்ராஸ் தினம் - 2026’ கட்டுரைப் போட்டி, ‘கலைகள் நாம்’ குழுவின் சுவர் ஓவியப் போட்டி ஆகியவை நடைபெற்றன.

மேலும், வரலாற்று அறிஞர் வி.ஸ்ரீராம் தொகுத்து வழங்கிய புனித ஜார்ஜ் கோட்டை வரலாற்று நடைப்பயணம், ‘நம் வீடு, நம் ஊரு, நம் கதை’ குழுவினர் செனட் ஹவுஸ், சேப்பாக்கம் அரண்மனை, விக்டோரியா பொது மண்டபத்தில் ஒருங்கிணைத்த பாரம்பரிய நடைப்பயணங்கள் மற்றும் ‘சைக்ளிங் யோகிஸ்’ குழுவின் சைக்ளிங் பேரணி ஆகியவை மிகச் சிறப்பாக நடைபெற்றன.

புதுமையான இலச்சினை மற்றும் நூல்கள் வெளியீடு

சென்னை விக்டோரியா பொது அரங்கத்தில் அமைச்சர் செ.ராஜேஷ்குமார் தலைமையில் நடைபெற்ற விழாவில், பாடகி மீனாட்சி இளையராஜா மற்றும் முத்துவின் மண்ணிசைப் பாடல்கள், கரகம், ஒயில் மற்றும் மயிலாட்டம் கலை நிகழ்ச்சிகள் அரங்கேறின.

சென்னையின் உணவு மற்றும் கலாச்சாரத்தை உலகளவில் கொண்டு சேர்க்கும் ‘டேஸ்ட் ஆஃப் சென்னை’ இலச்சினை, காமிக் லைப்ரரி தயாரித்த ‘தி லாஸ்ட் டிராம்’ புத்தகமும், செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தில் உருவான காணொளிகளும் வெளியிடப்பட்டன. இறுதியில் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கும் ஒருங்கிணைப்பாளர்களுக்கும் சான்றிதழ்களும் நினைவுப் பரிசுகளும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் சுற்றுலாத் துறை இயக்குநர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், சுற்றுலா வளர்ச்சிக் கழக பொதுமேலாளர் சி.லட்சுமி பிரியா, இணை இயக்குநர் திரு. மு.சேக் மன்சூர் உட்பட உயர் அலுவலர்கள், வரலாற்று ஆய்வாளர்கள் மற்றும் ஏராளமான மாணவர்கள் கலந்துகொண்டனர்.