சென்னையில் ஓடிய 383 பழைய பஸ்கள் மதுரை, விழுப்புரம் பகுதிகளுக்கு மாற்றப்பட உள்ளன. பயணிகளின் தேவையை பூர்த்தி செய்யும் முயற்சியாக இது செய்யப்படுகிறது. ஆனால், பஸ்களின் பாதுகாப்பு மற்றும் சாலை பயன்பாட்டு தகுதி குறித்து கேள்விகள் எழுந்துள்ளன.
தமிழகம் முழுவதும் பெண்களுக்கான பஸ் பயணம் விரிவாக்கம் செய்யப்பட்டது. நகர பஸ்களில் மட்டும் அனுமதிக்கப்பட்ட பெண்களுக்கு தற்போது ஏ.சி. பஸ்களை தவிர அனைத்து பஸ்களி லும் கட்டணம் இல்லாமல் செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள்.
இதனால் பஸ்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது. சென்னை தவிர மற்ற போக்குவரத்து கழகங்களில் நகர பஸ்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால் சிரமங்கள் ஏற்படுகிறது.
குறிப்பாக மதுரை, விழுப்புரம் போக்குவரத்து கழகங்களில் பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப பஸ் வசதி இல்லாததால் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுவது அறிந்து சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் இருந்து 383 பஸ்களை இந்த 2 போக்குவரத்து கழகத்திற்கு மாற்றப்பட உள்ளது.
சென்னையில் ஓடிய பழைய பஸ்கள் மதுரை, விழுப்புரத்திற்கு விரைவில் மாற்றப்பட உள்ளது. இதனால் அந்த மாவட்டங்களில் பயணிகளின் தேவையை சமாளிக்க முடியும்.
ஆனால் இந்த பஸ்களின் பாதுகாப்பு மற்றும் சாலை பயன்பாட்டு தகுதி குறித்து கேள்விகள் எழுப்பப்படுகின்றன. போக்குவரத்து துறை வெளியிட்ட அரசாணைப்படி அனைத்து அரசு போக்குவரத்து கழக பஸ்களும் 9 ஆண்டுகள் அல்லது 12 லட்சம் கி.மீ. இவற்றில் எது முதலில் வருகிறதோ அந்த வாகனத்தை சாலையில் இயக்குவதற்கு தகுதியற்றதாக கருதி ஓரங்கட்டப்பட வேண்டும்.
ஆனால் தற்போது 2 போக்குவரத்து கழகத்திற்கும் ஒதுக்கப்பட்டுள்ள பஸ்களில் ஒன்று கூட 9 ஆண்டுகளுக்கு குறைவானதில்லை என தெரிய வருகிறது.
9 முதல் 12 ஆண்டுகள் வரை பயன்பாட்டில் உள்ளதாக கூறப்படுகிறது. பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொள்ளாமல் பழைய பஸ்களை சென்னை மாநகர போக்குவரத்து கழகம் மாற்றம் செய்வதில் தீவிரமாக உள்ளது என்று போக்குவரத்து ஆர்வலர் ஒருவர் குற்றம் சாட்டினார்.
ஒரு பஸ் பயன்பாட்டிற்கு தகுதியற்றதாக இருந்தால் சென்னையில் இயங்கும் அந்த பஸ்சை மதுரை அல்லது விழுப்புரம் நகரில் இயக்குவதற்கு எப்படி தகுதியானதாக கருத முடியும் என அவர் கேள்வி எழுப்பினார்.
இலவசமாக பெண்கள் பயணிக்க அனுமதிக்கப்படுகிறார்கள் என்பதற்காக பயணிகளின் பாதுகாப்பில் அரசு சமரசம் செய்து கொள்ள முடியுமா? என்ற சர்ச்சை எழுந்துள்ளது.