ஐ.சி.எப். தொழிற்சாலையில் 2025-26-ம் நிதியாண்டில் 3 வந்தே பாரத் மற்றும் 22 அம்ரித் பாரத் ரெயில்கள் தயாரிக்கப்பட்டு உள்ளன.
இந்தியாவில் 3 ரெயில் பெட்டி தொழிற்சாலைகள் உள்ளது. அதில் பழமையான மற்றும் பெரிய தொழிற்சாலை ஐ.சி.எப். ஆகும். ஐ.சி.எப். தொழிற்சாலை 1955-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. சாதாரண ரெயில் பெட்டிகளைத் தயாரித்த இந்த தொழிற்சாலையில் தற்போது உலகத்தரத்திலான பெட்டிகளும் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
இங்கு தயாரிக்கும் பெட்டிகள் உள்நாடு மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இங்கு மின்சார ரெயில், எக்ஸ்பிரஸ் ரெயில் பயணிகள் (மெமு) ரெயில், குளிர்சாதன வசதி கொண்ட பெட்டிகள், சுற்றுலாவுக்கான ரெயில் பெட்டிகள் மற்றும் வந்தே பாரத் ரெயில் பெட்டிகள் என அனைத்து வகை ரெயில் பெட்டிகளும் தயாரிக்கப்படுகிறது.
ஐ.சி.எப். தொழிற்சாலை தொடங்கப்பட்ட காலத்தில் மிகக் குறைந்த அளவிலேயே உற்பத்தி நடைபெற்றது. ஆனால், தற்போது அதிநவீன வசதிகளுடன் பெட்டிகள் தயாரிக்கும் பணி வேகமெடுத்துள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் தயாரிப்பு பணிகள் விரிவாக்கம் செய்யப்பட்டு, ஆண்டுதோறும் 3 ஆயிரத்திற்கும் மேற் பட்ட ரெயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டு வருகிறது.
அந்தவகையில், 2025-26-ம் நிதியாண்டில் (ஏப்ரல் முதல் மார்ச் வரை) 3,405 ரெயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டு உள்ளன. இதில் டி.பி.ஆர்.எஸ். பெட்டிகள், படுக்கை வசதி வந்தே பாரத் அமர்ந்து செல்லும் வந்தே பாரத், மின்சார ரெயில் மற்றும் பயணிகள் ரெயில் பெட்டிகள் என மொத்தம் 857 பெட்டிகள் உற்பத்தி செய்யப்பட்டு உள்ளன.
மீதமுள்ள 2,548 பெட்டிகளும் எல்.எச்.பி. பெட்டிகள் (இலகுரக பெட்டி) ஆகும். இது 2024-25-ம் நிதியாண்டில் தயாரிக்கப்பட்ட 3,007 பெட்டிகளை விட, 13.2 சதவீதம் உற்பத்தி அதிகம் ஆகும்.
ஐ.சி.எப். தொழிற்சாலையில், 2025-26-ம் நிதியாண்டில் மொத்தம் 3 படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரெயில்கள், 10 அமர்ந்து செல்லும் வசதி கொண்ட வந்தே பாரத் ரெயில்கள், 4 ஏ.சி மின்சார ரெயில்கள், 22 அம்ரித் பாரத் (வெர்சன் 2.0) ரெயில்கள் தயாரிக்கப்பட்டு உள்ளன.
மேலும், ஐ.சி.எப்.பில் இருந்து கொல்கத்தா மெட்ரோவிற்கு 8 பெட்டிகள் கொண்ட 9 மெட்ரோ ரெயில்கள் தயாரித்து அனுப்பப்பட்டு உள்ளன.