தென்மேற்கு பருவமழை பொய்த்த நிலையில் நீலகிரி மாவட்டத்தின் கவனம் வடகிழக்கு பருவமழையை நோக்கி திரும்பி உள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் இந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை 4 மாதங்களுக்கு பெய்ய வேண்டிய தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்த அளவில் பொழியவில்லை. இதனால் மாவட்ட அளவில் சுமார் 32 சதவீதம், ஊட்டி நகரப்பகுதியில் சுமார் 50 சதவீதம் மழை பெய்யவில்லை.
நீலகிரியில் தென்மேற்கு பருவமழை காலத்தில் சராசரியாக 842 மி.மீ. மழை பதிவாகும். ஆனால் இந்தாண்டு 572 மி.மீ. மழை மட்டுமே பதிவானது. அதாவது இயல்பைவிட சுமார் 270 மி.மீ. குறைவாக மழை பெய்து உள்ளது. இது ஏறத்தாழ 32 சதவீதம் பற்றாக்குறை ஆகும்.
இதன்காரணமாக ஊட்டி, குந்தா, கூடலூர், பந்தலூர் மற்றும் மத்திய-மேற்கு பகுதிகளுக்கும் மழைப்பொழிவு ஒரே சீராக அமையவில்லை. ஊட்டியில் தென்மேற்கு பருவமழை காலத்தில் இயல்பாக 530 மி.மீ. மழை கிடைக்கும். ஆனால் இந்தாண்டு 253 மி.மீ. மட்டுமே பதிவாகி உள்ளது. அதாவது சுமார் 277 மி.மீ. மழை குறைந்துள்ளது. இது இயல்பான அளவுடன் ஒப்பிடும்போது 52 சதவீதத்திற்கும் அதிகமான பற்றாக்குறை ஆகும்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ளூர் மக்களுடன் ஏராளமான சுற்றுலாப் பயணிகளும் வந்து செல்வதால், நீராதாரங்களை பாதுகாப்பதும் கிடைக்கும் தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்துவதும் முக்கியத்துவம் பெறுகிறது. ஊட்டியின் முக்கிய குடிநீர் ஆதாரங்களில் ஒன்றான பார்சன்ஸ்வேலி அணையில் மட்டும் ஒப்பீட்டளவில் நல்ல மழை கிடைத்து இருப்பது சற்று ஆறுதலாக உள்ளது. இதனால் அந்த நகரின் குடிநீர் சப்ளையை தொடர்ந்து மேற்கொள்ள தற்போதைய நீர்மட்டம் உதவும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. நீலகிரி மாவட்டத்தில் அவலாஞ்சி, அப்பர்பவானி மற்றும் எமரால்டு உள்ளிட்ட முக்கிய நீர்த்தேக்கங்கள் நீர்மின் உற்பத்தி, நீர்வள மேலாண்மைக்கு முக்கியம் வாய்ந்தவை. இந்தாண்டு தென்மேற்கு பருவமழையால் எதிர்பார்த்த அளவில் நீர்வரத்து கிடைக்காததால், அணைகள் முழுமையாக நிரம்பவில்லை. தொடர்ந்து போதிய மழை கிடைக்காமல் போனால் அணைகளின் இருப்பு, நிலத்தடி நீர் மட்டம் குறைவு, விவசாயம் மற்றும் நீர்மின் உற்பத்தி உள்ளிட்ட பல்வேறு துறைகள் பாதிக்கப்படும்.
தென்மேற்கு பருவமழை பொய்த்த நிலையில் நீலகிரி மாவட்டத்தின் கவனம் வடகிழக்கு பருவமழையை நோக்கி திரும்பி உள்ளது. இந்த பருவமழையின் மூலம் கிடைக்கும் தண்ணீரில்தான் தற்போதைய பற்றாக்குறையை ஈடுசெய்ய இயலும். மேலும் தற்போது கிடைக்கும் நீரை பாதுகாப்பது மிகவும் அவசியம்.
வீடுகளில் திறந்துவிடப்படும் குடிநீர் குழாய்கள், சரிசெய்யப்படாத கசிவுகள், தண்ணீர் அதிக பயன்பாடு போன்றவற்றால் கணிசமான அளவு குடிநீர் வீணாகலாம். எனவே பொதுமக்கள், வணிக நிறுவனங்கள், உணவகங்கள், விடுதிகள் மற்றும் சுற்றுலா சார்ந்த நிறுவனங்கள் ஆகியவை தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துவதுடன் மழைநீர் சேகரிப்பு அமைப்புகளை செயல்பாட்டில் வைத்திருப்பதும் அவசியம் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.