தமிழக செய்திகள்

நாமக்கல் அரசு மகளிர் விடுதியில் 30 பேருக்கு உடல் நலக்குறைவு: மாணவிகள் சாப்பிட்ட உணவு சோதனைக்கு அனுப்பி வைப்பு

ஆய்வுக்கு பின்னரே மாணவிகள் மயக்கம் அடைந்ததற்கு என்ன காரணம் ? என்பது தெரிய வரும்.

நாமக்கல்- மோகனூர் சாலையில் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் மாணவிகள் விடுதி உள்ளது. இங்கு 103 மாணவிகள் தங்கி உள்ளனர். இவர்கள் நாமக்கல் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை படித்து வருகின்றனர். தற்போது பிளஸ்- 1 மற்றும் பிளஸ்- 2 வகுப்புகளுக்கு தேர்வு முடிந்து விட்டதால் அவர்கள் சொந்த ஊருக்கு சென்று விட்டனர். தற்போது விடுதியில் 6 முதல் 9-ம் வகுப்பு வரை படிக்கும் 56 மாணவிகள் மட்டும் தங்கி படித்து வருகின்றனர்.

இந்த விடுதியில் கொல்லிமலை பகுதியை சேர்ந்த மாணவிகள் அதிகம் பேர் உள்ளனர். இந்நிலையில் நேற்று மதியம் மாணவிகளுக்கு விடுதியில் சாதம், முட்டை கோஸ் பொரியல் மற்றும் பரங்கிக்காய் சாம்பார் வழங்கப்பட்டது. இதை சாப்பிட்ட மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.

வாந்தி, மயக்கம் ஏற்பட்ட 30 மாணவிகள் நாமக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சாம்பார் காலையில் சமைத்ததில் மீதம் இருந்த சாம்பார் என கூறப்படுகிறது. இதை சாப்பிட்டதால் மாணவிகள் மயக்கம் அடைந்தார்களா? அல்லது வேறு ஏதாவது காரணம் இருக்கிறதா? என்பதை உணவு பாதுகாப்பு அதிகாரி தங்க விக்னேஷ் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்து 9 உணவு மாதிரிகளை சேகரித்து ஆய்வுக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆய்வுக்கு பின்னரே மாணவிகள் மயக்கம் அடைந்ததற்கு என்ன காரணம் ? என்பது தெரிய வரும்.