மர்ம கும்பல் அந்த குடோனில் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். அங்கு வைக்கப்பட்டிருந்த ரூ.1 கோடியே 2 லட்சத்து 55 ஆயிரம் மதிப்பிலான காப்பர் வயர்கள், கம்பிகள் உள்ளிட்டவற்றை கொள்ளையடித்துச்சென்றனர்.
கோவையை சேர்ந்த தனியார் சோலார் நிறுவனம் சார்பில் திசையன்விளை அருகே உள்ள கஸ்தூரிரெங்கபுரத்தில் சோலார் நிறுவப்பட்டு வருகிறது.
இந்த நிறுவனத்தின் மேலாளராக கன்னியாகுமரி மாவட்டம் மதுசூதனபுரத்தை சேர்ந்த கவுதமமுத்து என்பவரது மகன் ஆனந்த்(வயது 40) பணியாற்றி வருகிறார். அந்த நிறுவனத்திற்கு தேவையான சோலார் மின் சாதனங்கள் மற்றும் செப்புக் கம்பிகள் அனைத்தும் அங்குள்ள குடோனில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு இருந்தன.
இந்நிலையில் கடந்த 1-ந்தேதி இரவில் மர்ம கும்பல் அந்த குடோனில் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். அங்கு வைக்கப்பட்டிருந்த ரூ.1 கோடியே 2 லட்சத்து 55 ஆயிரம் மதிப்பிலான காப்பர் வயர்கள், கம்பிகள் உள்ளிட்டவற்றை கொள்ளையடித்துச்சென்றனர்.
இதுகுறித்து சோலார் மேலாளர் ஆனந்த் அளித்த புகாரின் பேரில், திசையன்விளை போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதிகளில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்தனர். அப்போது அதில் சுமார் 8 பேர் கும்பல் இந்த கொள்ளையில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் தனிப்படை அமைத்து கொள்ளை கும்பலை தீவிரமாக தேடி வந்தனர். அதில் திசையன்விளை காமராஜ் நகர் 5-வது தெருவை சேர்ந்த சக்திவேல் மகன் சந்துரு(வயது21), திசையன்விளை புளியடி தெருவை சேர்ந்த பாக்கியராஜ் மகன் முத்துகிருஷ்ணன்(24), திசையன்விளை தெற்கு தெருவை சேர்ந்த சண்முகநாதன் மகன் லோகேஷ்(24) ஆகியோரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள முக்கிய நபர் உள்பட 5 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.