தமிழக செய்திகள்

சிப்காட் அருகே ஏரியில் மூழ்கி 3 பள்ளி மாணவர்கள் பலி

ஏரியில் மூழ்கி 3 சிறுவர்கள் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

மாலை மலர்

ராணிப்பேட்டை:

ராணிப்பேட்டை மாவட்டம், சிப்காட் டி.வி.கே நகர் 4-வது தெருவை சேர்ந்தவர் செல்வம் மகன் பார்த்திபன் (வயது13). அதே பகுதியை சேர்ந்தவர்கள் சரவணன் மகன் நித்திஷ் (14), கமலக்கண்ணன் மகன் நித்திஷ்(13). இவர்கள் 3 பேரும் சிப்காட் பகுதியில் உள்ள பள்ளிகளில் படித்து வந்தனர்.

தற்போது 10-ம் வகுப்பு பொது தேர்வு நடைபெற்று வருவதால் பள்ளிகளுக்கு காலை நேரம் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மதியம் தான் பள்ளி என்பதால் நண்பர்களான 3 பேரும் சிப்காட் அருகே உள்ள மணியம்பட்டு ஏரியில் குளிக்கச் சென்றதாக கூறப்படுகிறது.

அப்போது, நீரில் மூழ்கி 3 பேரும் தத்தளித்தனர். இதை பார்த்த அங்கிருந்த ஒருவர் அக்கம்பக்கத்தில் இருந்த பொதுமக்கள் உதவியுடன் ஏரியில் மூழ்கிய மாணவர்களை மீட்டனர். தொடர்ந்து, அருகே உள்ள

சிப்காட் தனியார் ஆஸ்பத்திரிக்கு 3 பேரையும் கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் 3 பேரும் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த சிப்காட் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடல்களை மீட்டனர். பின்னர், பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஏரியில் மூழ்கி 3 சிறுவர்கள் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.