தமிழக செய்திகள்

கோடை சீசனை முன்னிட்டு கோவை-ஊட்டி இடையே மேலும் 25 சிறப்பு பஸ்கள்

நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசனையொட்டி ஊட்டியில் மலர் கண்காட்சி தொடங்கி நடைபெற்று வருகிறது.

கோவை மேட்டுப்பாளையம் சாலை மற்றும் சாய்பாபா காலனி புதிய பஸ் நிலையத்தில் இருந்து நீலகிரி மாவட்டம் குன்னூர், கோத்தகிரி, ஊட்டி, கூடலூர் ஆகிய பகுதிகளுக்கு தினமும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பஸ்கள் இயக்கப்படுகின்றன.

இந்த நிலையில் நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசனையொட்டி ஊட்டியில் மலர் கண்காட்சி தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதேபோல ஊட்டி ரோஜா கண்காட்டி, குன்னூர் சிம்ஸ் பூங்கா பழக்கண்காட்சி மற்றும் கூடலூரில் வாசனை திரவியங்கள் கண்காட்சி ஆகியவற்றுக்கான முன்னேற்பாட்டு பணிகள் தொடங்கி நிறைவுபெறும் நிலையில் உள்ளன.

இதனால் ஊட்டிக்கு செல்லும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக, கோவையில் இருந்து ஊட்டிக்கு வார இறுதி நாட்களில் கூடுதலாக 25 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

இதுதொடர்பாக கோவை அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகள் கூறுகையில், கோடை விடுமுறை மற்றும் சீசனையொட்டி கோவையில் இருந்து ஊட்டிக்கு வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்களில் வழக்கமாக பஸ்களுடன் கூடுதலாக 25 சிறப்பு பஸ்கள் குன்னூர், கோத்தகிரி வழியாக இயக்கப்படுகின்றன.

அதேபோல வாரநாட்களில் தேவை ஏற்பட்டால் பயணிகளின் வருகைக்கு ஏற்ப கூடுதல் பஸ்கள் இயக்கப்படுவதாக தெரிவித்து உள்ளனர்.