தமிழக செய்திகள்

‘ஏசி’ காத்திருப்பு அறை உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் தமிழகத்தில் 25 நவீன பத்திரப்பதிவு மையங்கள்

மையங்களை வடிவமைத்து பராமரிக்கும் பணிகள் தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட உள்ளன. இதற்கான ஒப்பந்தக் காலம் 5 ஆண்டுகள்.

தமிழகத்தில் பத்திரப்பதிவுக்கான சேவைகளை மேம்படுத்த 25 நவீன மையங்கள் அமைக்கப்படும். ஏசி வசதியுடன் கூடிய காத்திருப்பு அறைகள், டோக்கன் முறை, கைரேகை அடையாளம், சி.சி.டி.வி. கண்காணிப்பு உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்படும்.

தமிழகத்தில் 582 சார்பதிவாளர் அலுவலகங்கள் உள்ளன. இங்கு பத்திரப் பதிவுக்காக நீண்ட நேரம் காத்திருப்பு மற்றும் கூட்ட நெரிசலை குறைப்பதற்காக 25 நவீன மாதிரி பதிவு மையங்கள் அமைக்கப்படும் என்று பதிவுத்துறை அமைச்சர் டி.லோகேஷ் தமிழ்செல்வன் கடந்த சட்டசபை கூட்டத்தில் அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.

நவீன வசதி

இதற்கான டெண்டர் அறிவிப்பை பதிவுத்துறை தற்போது வெளியிட்டு உள்ளது. தகுதியுள்ள நிறுவனங்கள் tntenders.gov.in இணையதளத்தில் அடுத்த மாதம் (நவம்பர்) 16-ந்தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். டெண்டரில் பங்கேற்க ரூ.65 லட்சம் முன்வைப்புத் தொகையாக செலுத்த வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

புதிய மையங்களில் ஏசி வசதியுடன் கூடிய காத்திருப்பு அறைகள், டோக்கன் முறை, கைரேகை உள்ளிட்ட அடையாள சரிபார்ப்பு வசதி, உதவி மையங்கள், குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன. சி.சி.டி.வி. கேமராக்கள் மூலமாகவும் கண்காணிக்கப்படும். ஆவணங்களை விரைவாக சரிபார்த்துப் பதிவு செய்வதுடன் இடைத்தரகர்களின் தலையீட்டை குறைத்து வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துவதும் இதன் நோக்கம் ஆகும்.

இந்த மையங்களை வடிவமைத்து பராமரிக்கும் பணிகள் தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட உள்ளன. இதற்கான ஒப்பந்தக் காலம் 5 ஆண்டுகள். முதல்கட்ட சோதனை முயற்சியாக 5 நவீன பதிவு மையங்கள் அமைக்கப்படும்.

அதற்கான வரவேற்பைப் பொருத்து அடுத்தக்கட்டமாக மேலும் 20 மையங்கள் உருவாக்கப்பட உள்ளன. இத்திட்டம் செயல்பாட்டுக்கு வரும்போது பத்திரப்பதிவுக்காக காத்திருக்கும் நேரத்தைக் குறைத்து பொதுமக்களுக்கு மேம்பட்ட சேவைகளை வழங்க முடியும் என்று துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT