நாமக்கல் மாவட்டம் மாணிக்கம்பாளையம் அருகே அமைந்துள்ள லத்துவாடி பகுதியில் உக்கிராண்டி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் குதிரை சுமார் 23 ஆண்டு காலமாக பல்வேறு நிகழ்வுகளுக்கு பயன்படுத்தப்பட்டு வந்தது.
வயது மூப்பு காரணமாக சமீப காலமாக உடல்நலம் குன்றி இருந்த இந்த குதிரைக்கு மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டது. இருந்தாலும் சிகிச்சைகள் பலனின்றி இந்த குதிரை மரணம் அடைந்தது.
இதையடுத்து லாயத்தில் இருந்து குதிரையை கோவில் வளாகத்திற்கு கொண்டு வந்து வைத்து அந்த குதிரைக்கு இறைவனுக்கு செய்வதை போன்று பால், தயிர், இளநீர், சந்தனம், குங்குமம் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்கள் செய்து ஊர் சார்பில் மரியாதைகள் மற்றும் ஒவ்வொரு சமுதாயத்தின் சார்பில் புனித வஸ்திரங்கள் அணிவித்து ஊர்வலமாக எடுத்துச் சென்று கோவிலுக்கு பக்கத்தில் உள்ள காட்டில் புதைத்தனர்.
முன்னதாக குதிரைக்கு மஞ்சள் நீர் தெளிக்கப்பட்டு பெண்கள் தங்கள் வீட்டில் ஒருவர் இறந்ததை போன்று மார்பிலும் தலையிலும் அடித்துக் கொண்டு குதிரையை வலம் வந்து கதறி அழுதனர். ஆண்கள் குதிரையின் தலைக்கு எண்ணெய், சீகைக்காய் வைத்து புனித நீராட்டினர்.
18 கிராமங்களுக்கு கோவிலான உக்ராண்டி அம்மன் கோவில் குதிரை இறந்ததில் அந்த பகுதி சோகத்தில் மூழ்கியது.
மேற்கண்ட நிகழ்வுகளை முன் நின்று நடத்திய தேசிய சிந்தனை பேரவை தலைவர் திருநாவுக்கரசு கூறுகையில் குதிரை வயது மூப்பு காரணமாக சிகிச்சைகள் பலனின்றி புரட்டாசி திருவோண நட்சத்திரம் அன்று மரணம் அடைந்திருக்கிறது.
குதிரை இறந்த காரணத்தால் இறைவனுக்கு செய்வது போன்று அனைத்து விதமான அபிஷேகங்கள், ஆராதனைகள் செய்யப்பட்டு குதிரை நல்லடக்கம் செய்யப்பட்டது என்று வருத்தத்துடன் கூறினார்.