சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தும் வகையில் 223 கேமராக்கள் பொருத்தும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதுகுறித்து சென்னை ரெயில்வே பாதுகாப்புப் படை உயர் அதிகாரிகள் கூறியதாவது:-
சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் ஏற்கெனவே நடைமேடை உள்ளிட்ட பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அவை வழக்கமான குறிப்பிட்ட காட்சிகளைப் பதிவு செய்யும் வகையில் உள்ளன. ஆனால், தற்போது ரெயில்களில் உரிய ஆவணங்களின்றி தங்கம், வெள்ளி மற்றும் ஹவாலா பணம், போதைப் பொருள்கள் கடத்தல் அதிகரித்திருப்பதாக புகார்கள் எழுந்துள்ளன.
இதை உறுதிப்படுத்தும் வகையில் கடந்த ஜனவரி முதல் தற்போது வரை அதிக அளவிலான போதைப் பொருள்கள் கைப்பற்றப்பட்டு வருகின்றன. ரெயில் நிலைய வளாகத்தில் பயணிகள் தவிர சம்பந்தமில்லாத நிலையில் நூற்றுக்கணக்கானோர் தங்கிவருவதாகவும், அவர்களால் திருட்டு உள்ளிட்ட குற்றச் சம்பவங்கள் அதிகம் நடப்பதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.
இதனால், ரெயில் நிலைய வளாகத்தை 24 மணி நேரமும் கண்காணிக்கும் வகையில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணிகள் கடந்த சில மாதங்களுக்கு முன் தொடங்கியது. ஆனால், அப்பணிகள் திடீரென நிறுத்தப்பட்டன. இதற்கிடையே தற்போது 19 இடங்களில் கம்பம் நட்டு அதில் அதிநவீன கேமராக்கள் பொருத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. ரெயில் நிலையத்தில் ஒரே பகுதியைக் கண்காணித்து படம் பிடிக்கும் வகையில் 150 நிலையான கேமராக்களும், 45 யு.எச்.டி. கேமராக்களும், எல்லா திசையிலும் சுழன்று காட்சிகளைப் படம் பிடிக்கும் 14 கேராக்களும், காட்சிகளைப் பெரிதுபடுத்திப் பார்க்கும் வகையிலான 7 கேமராக்களும் என மொத்தம் 223 கேமராக்கள் இந்த மாத இறுதிக்குள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.