தமிழக செய்திகள்

டெங்கு காய்ச்சலுக்கு இதுவரை 21,665 பேர் பாதிப்பு - மருத்துவ முகாமில் அமைச்சர் அருண்ராஜ் ஆய்வு

கொசு ஒழிப்பு பணியாளர்களை போதிய அளவில் நியமித்து பணியில் ஈடுபடுத்த உள்ளோம்.

டெங்கு கொசு அதிகம் உள்ள இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட்டு வருகிறது என்று அமைச்சர் அருண்ராஜ் கூறினார்.

சென்னையில் டெங்கு பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் சென்னை மாநகராட்சி சார்பில் வடபழனியில் மருத்துவ முகாமுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அதில் பொதுமக்களுக்கு இலவசமாக மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்பட்டன. இந்த மருத்துவ முகாமை அமைச்சர் அருண்ராஜ் இன்று பார்வையிட்டார். அதன்பிறகு அந்த பகுதியில் வீடுவீடாக சென்று அவர் ஆய்வு செய்தார்.

பின்னர் அமைச்சர் அருண்ராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:-

சென்னையில் பெருநிறுவனங்கள் கொசுக்கள் பரவும் வகையில் தண்ணீர் தேங்கி வைத்திருந்தால் முதலில் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். பின்னர் கூடுதல் அபராதம் விதிக்கப்படும். தமிழக அரசு டெங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை போதிய அளவில் எடுத்து வருகிறது.

தமிழகம் முழுவதும் காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. தினமும் 1,000 காய்ச்சல் முகாம்கள் நடத்தப்படுகின்றன. சென்னையில் 2 வார்டுகளுக்கு ஒரு சிறப்பு மருத்துவ முகாம் நடத்தி காய்ச்சல் இருந்தால் தேவையான ரத்த பரிசோதனை செய்து டெங்கு உறுதி செய்யப்பட்டால் அதற்கான சிகிச்சையை அளிக்கிறோம்.

தமிழகத்தில் கடந்த ஜனவரி 1-ந்தேதி முதல் நேற்று வரை 21,665 பேருக்கு டெங்கு பாதிப்பு உள்ளது. டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளனர். டெங்குவால் பாதிக்கப்பட்ட 301 பேர் உள்நோயாளிகளாக சிகிச்சையில் உள்ளனர்.

சென்னையில் டெங்கு பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. சென்னையில் இன்னும் பருவமழை தொடங்கவில்லை. பருவமழை தொடங்கிய பிறகு கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். பருவமழையின்போது சென்னையில் டெங்கு பாதிப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.

கொசு ஒழிப்பு பணியாளர்களை போதிய அளவில் நியமித்து பணியில் ஈடுபடுத்த உள்ளோம். போதிய கொசு ஒழிப்பு மருந்துகள் மற்றும் உபகரணங்கள் தயாராக உள்ளது. சென்னையில் கொசு ஒழிப்பு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. சென்னையில் 3,700 பேர் வீடு வீடாக சென்று கொசு ஒழிப்பு பணியில் ஈடுபட உள்ளனர். அவர்கள் 7 நாட்களுக்கு ஒருமுறை ஒவ்வொரு வீடுகளுக்கும் திரும்ப சென்று கொசு ஒழிப்பு பணியில் ஈடுபடுவார்கள்.

டெங்கு கொசு அதிகம் உள்ள இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட்டு வருகிறது. பருவ மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொசு ஒழிப்பு முயற்சிகளை பார்வையிட்டேன். டெங்கு ஒழிப்பில் மக்களின் ஒத்துழைப்பு அவசியம். சென்னையில் கால்வாய் பணிகளை விரைந்து முடிக்க முதலமைச்சர் அறிவுறுத்தி உள்ளார். இந்த மாத இறுதிக்குள் அனைத்து பணிகளும் முடிந்துவிடும்.

இவ்வாறு அவர் பேசினார்.

அப்போது அவரிடம், கொசு ஒழிப்பு தொடர்பாக சென்னை மாநகராட்சி சார்பில் காய்ச்சல் முகாம் நடத்தப்படுகிறது. ஆனால் எந்த நிகழ்ச்சிகளிலும் சென்னை மேயர் பிரியா கலந்து கொள்வதில்லையே ஏன்?' என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள்.

அதற்கு அவர் பதில் அளிக்கையில், 'அரசும், உள்ளாட்சி நிர்வாகமும் சேர்ந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள். அரசியல் காரணங்களுக்காக அவர் இப்படி செய்யக்கூடாது. அவர் என்ன காரணத்தினால் இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கு வருவதில்லை என்று நீங்கள் அவரிடம் கேட்டு சொல்லுங்கள்' என்றார்.

SCROLL FOR NEXT