2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் தனது முதல் தேர்தலிலேயே மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்து வருகிறது. மதியம் 1:00 மணி நிலவரப்படி, இக்கட்சி சுமார் 104 தொகுதிகளில் முன்னிலை வகித்து திராவிடக் கட்சிகளுக்குப் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது.
குறிப்பாக சென்னை மாவட்டத்தில் உள்ள 16 தொகுதிகளில் 14 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. இத்தேர்தலில் கிட்டத்தட்ட தவெக வெற்றி உறுதியாகி உள்ளது. இந்நிலையில் நடிகர் விஜய்க்கு நடிகர்கள் பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் நடிகர் சிவகார்த்திகேயன்,
“தனது முதல் தேர்தல் களத்திலேயே மக்கள் மத்தியில் இவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி, இந்த வெற்றியை ஈட்டிய விஜய் அவர்களுக்குப் பாராட்டுகள்! நீங்கள் திரையுலகத்தைச் சேர்ந்தவர் என்பது கூடுதல் மகிழ்ச்சி அளிக்கிறது; உங்கள் மக்கள் பணி சிறந்து விளங்க எனது நல்வாழ்த்துகள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
நடிகர் விஜய் தேவரகொண்டா,
"வாக்களிப்பதன் மூலம் தங்களுக்கான நிலைப்பாட்டை இவ்வளவு உறுதியாக எடுத்த தமிழ்நாட்டு மக்களுக்கு எனது பாராட்டுகளும் வாழ்த்துகளும்.தமிழக மக்கள் அனைவருக்கும், புதிய முதலமைச்சருக்கும் அனைத்து செல்வங்களும், கூட்டு வளர்ச்சியும் கிடைக்க வாழ்த்துகிறேன். தமிழக அரசியலின் இந்த புதிய கட்டத்தையும், புதிய முகத்தையும் காண ஆவலாக உள்ளேன்." என தெரிவித்துள்ளார்.
நடிகர் நானி,
“நடிகர் விஜய்க்கு வாழ்த்துக்கள். முதலில் சந்தேகிக்கப்பட்டார்; பின்னர் முடிசூட்டப்பட்டார். இது எங்கள் வீட்டில் நடந்தது, இப்போது எங்கள் அண்டை வீட்டிலும் நடக்கிறது.
யாரும் எதிர்பார்க்காத ஒருவர் வெற்றி பெறுவது என்பது எப்போதும் ஒரு 'அப்சல்யூட் சினிமா' (அல்லது நான் அதை 'அப்சல்யூட் அரசியல்' என்று சொல்ல வேண்டுமா?) :)தங்கள் முடிவை மிகத் தெளிவாகத் தெரிவித்துள்ள தமிழக மக்களுக்குத் தொடர்ச்சியாக நல்ல விஷயங்கள் நடக்கும் என நம்புகிறேன்.” என தெரிவித்துள்ளார்.
நடிகர் விக்ரமும் வரலாற்று வெற்றிப் பெற்றுள்ளதாக வாழ்த்து தெரிவித்துள்ளார். தொடர்ந்து பல தலைவர்களும் தங்களது வாழ்த்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.