தமிழக செய்திகள்

தமிழக மீனவர்கள் 20 பேர் கைது- மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் விஜய் கடிதம்

தமிழ்நாட்டின் கடலோர மீனவச் சமூகத்தினரிடையே பெரும் கவலையையும், அச்சத்தையும் ஏற்படுத்தி வருகிறது.

இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த 20 மீனவர்களையும், 270 மீன்பிடிப் படகுகளையும் விரைவாக விடுவிக்கத் தேவையான நடவடிக்கை எடுக்கக்கோரி, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் விஜய் கடிதம் எழுதி உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

தமிழ்நாட்டு மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவது குறித்து, மத்திய வெளியுறவுத் துறை மந்திரி தனிக்கவனம் செலுத்திட வேண்டும்.

கடந்த 3.10.2026 அன்று, ராமேஸ்வரத்தைச் சேர்ந்த ஒன்பது மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் கைது செய்ததோடு, அவர்களின் விசைப்படகையும் (பதிவு எண்: IND-TN-10-MM-0457) பறிமுதல் செய்துள்ளனர். இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெறுவது தமிழ்நாட்டின் கடலோர மீனவச் சமூகத்தினரிடையே பெரும் கவலையையும், அச்சத்தையும் ஏற்படுத்தி வருகிறது.

மேலும், ராமநாதபுரம் மற்றும் அதனை ஒட்டியுள்ள கடலோர மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள், பாரம்பரியமாகவே பாக் ஜலசந்தி பகுதியில் மீன்பிடித் தொழிலைச் செய்து தங்கள் வாழ்வாதாரத்தைப் பேணி வருகிறார்கள், குறிப்பாக, மீன்பிடிப்படகுகளே அவர்களின் முதன்மையான வாழ்வாதாரமாக விளங்குவதால், மீனவர்கள் கைது செய்யப்படுவதும், அவர்களின் படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும் அவர்களது குடும்பங்களுக்குப் பெருந்துயரத்தையும், பொருளாதார நெருக்கடியையும் ஏற்படுத்துகிறது.

கைது செய்யப்பட்ட மீனவர்களையும், அவர்களின் படகுகளையும் விரைந்து மீட்பது பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மிகவும் இன்றியமையாததாகும். இருநாட்டு மீனவர்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும்.

இத்தகைய சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெறுவது, இரு நாடுகளுக்கிடையேயான பேச்சுவார்த்தைக்கான தற்போதைய அதிகாரப்பூர்வ அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை உணர்த்துவதாக அமைந்துள்ளது.

இதற்கென அமைக்கப்பட்டுள்ள மீன்பிடி விவகாரங்கள் தொடர்பான இந்தியா-இலங்கை கூட்டுப் பணிக்குழுவை (India-Sri Lanka Joint Working Group on Fisheries) உரிய முறையில் புனரமைத்து, அதன் கூட்டத்தை விரைவாகக் கூட்டி, இருநாட்டு மீனவர்களின் பிரச்சனைகளுக்கு ஆக்கப்பூர்வமான தீர்வுகளைக் காண நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எனவே, இவ்விவகாரத்தை இலங்கை அரசிடம் உடனடியாகக் கொண்டு சென்று, தற்போது இலங்கையில் காவலில் வைக்கப்பட்டுள்ள 20 தமிழ்நாட்டு மீனவர்களை விரைவாக விடுதலை செய்து தாயகம் அழைத்து வரவும், பறிமுதல் செய்யப்பட்டுள்ள 270 மீன்பிடிப் படகுகளை மீட்டுத் தரவும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT