தமிழக செய்திகள்

கூட்டுறவு நிறுவனப் பணியாளர்களுக்கு 20% போனஸ் - தமிழ்நாடு அரசு உத்தரவு!

44,573 பணியாளர்கள் இதன்மூலம் பயனடைவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு கூட்டுறவு நிறுவனப் பணியாளர்களுக்கு 20% வரை தீபாவளி போனஸ் வழங்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

தமிழ்நாட்டில் கூட்டுறவு நிறுவனங்களில் பணியாற்றும் பணியாளர்களின் உழைப்பு, அர்ப்பணிப்பு மற்றும் சேவையைப் பாராட்டி, 2025-2026 ஆம் ஆண்டிற்கான தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்கிட தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

இதன்படி போனஸ் சட்டத்தின் கீழ் வரும் கூட்டுறவு நிறுவனங்களில் ஒதுக்கக்கூடிய உபரித் தொகையின் அடிப்படையில், அந்நிறுவனப் பணியாளர்களுக்கு 20 விழுக்காடு வரை மிகை ஊதியம் வழங்கப்படும்.

உபரித் தொகை இல்லாத கூட்டுறவு நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு 10 விழுக்காடு மிகை ஊதியம் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும்.

கூட்டுறவுத் துறையில் குறைந்த எண்ணிக்கையிலான பணியாளர்களைக் கொண்டு செயல்பட்டு, நிகர லாபம் ஈட்டும், போனஸ் சட்டத்தின் கீழ் வராத கூட்டுறவு நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு 20 விழுக்காடு வரை மிகை ஊதியம் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும்.

மேலும், போனஸ் சட்டத்தின் கீழ் வராத நிகர இலாபம் ஈட்டாத தலைமைச் சங்கங்கள் மற்றும் மத்திய சங்கங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு ரூ.3,000/-, தொடக்கக் கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு ரூ.2,400/- வீதம் கருணைத் தொகையாக வழங்கப்படும்.

இதன்படி, தமிழ்நாடு முழுவதும் உள்ள கூட்டுறவு நிறுவனங்களில் பணிபுரியும் 44,573 பணியாளர்களுக்கு மொத்தம் ரூ.49.69 கோடி மிகை ஊதியம் மற்றும் கருணைத் தொகையாக வழங்கப்பட உள்ளது.

தமிழ்நாடு அரசின் இந்த நடவடிக்கை கூட்டுறவு நிறுவனப் பணியாளர்களை ஊக்குவிப்பதுடன், அவர்கள் தங்களது குடும்பத்தினருடன் தீபாவளிப் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாட வழிவகுக்கும்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT