கொலை சம்பவம் நடந்த இடத்திற்கு ராமநாதபுரத்தில் இருந்து தேவசேனா என்ற மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. அந்த நாய் கொலை நடந்த இடத்தில் இருந்து சிறிது தூரம் ஓடி அங்கேயே நின்றுகொண்டது. எனவே கொலையாளிகள் அங்கிருந்து வாகனங்கங்களின் மூலம் தப்பிச்சென்று இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே சின்னமாயாகுளம் கிராமம் அமைந்துள்ளது.
அங்குள்ள கடற்கரையை ஒட்டிய மணல் பரப்பில் இரவு நேரங்களில் வாலிபர்கள் அமர்ந்து மது அருந்துவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். ஒருசில சமயங்களில் அவர்களுக்கிடையே வாக்குவாதம், தகராறு ஏற்படுவதும், அப்பகுதியை சேர்ந்தவர்கள் அவர்களை சமாதானப்படுத்தி அப்புறப்படுத்துவதும் தொடர்கதையாக இருந்து வருகிறது.
இதற்கிடையே சின்னமாயாகுளம் பகுதியை சேர்ந்தவர்கள் கணேசன் என்ற ரியாஸ் (வயது 56) மற்றும் கோபி (38). வயது வேறுபாடு இருந்தபோதிலும் இருவரும் நண்பர்கள் போல் இருந்து வந்துள்ளனர். அதிலும் அவர்கள் கூலிவேலை மற்றும் கிடைக்கும் பணிகளுக்கு ஒன்றாகவே சென்றுள்ளனர்.
அதேபோல் இரவில் பாரதிநகர் அருகிலுள்ள காட்டுப்பகுதிக்கு சென்று மது அருந்துவதும் வழக்கம்.
இந்தநிலையில் இன்று அதிகாலை அந்த பகுதிக்கு சென்றவர்கள் அலறி அடித்துக்கொண்டு ஊருக்குள் ஓடிவந்தனர். அவர்கள் கூறிய தகவலின்படி பொதுமக்கள் அங்கு சென்று பார்த்தபோது, கணேசன் என்ற ரியாஸ், கோபி ஆகிய இருவரும் உடல் முழுவதும் ரத்தக்காயங்களுடன் பிணமாக கிடந்தனர். அவர்களுக்கு அருகிலேயே ஏராளமான மது பாட்டில்களும் சிதறிக்கிடந்தன.
தகவல் அறிந்த ஏர்வாடி போலீசார் அதிரடியாக அங்கு வந்து விசாரணை நடத்தினர். நேற்று நள்ளிரவில் அந்த பகுதிக்கு வந்தவர்களிடையே மது அருந்துவதில் பிரச்சனை ஏற்பட்டு இருக்கலாம் என்றும், அதில் ஏற்பட்ட தகராறில் கணேசன், கோபி இருவரும் எதிர்தரப்பினரால் அடித்துக்கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று தெரியவந்துள்ளது.
இரவு நேரம், காட்டுப்பகுதி என்பதால் யார், யார் அந்த பகுதிக்கு வந்தார்கள் என்பது உறுதியாக தெரியவில்லை. அதேபோல் அங்கு சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமரா போன்ற எந்தவிதமான வசதியும் செய்யப்படவில்லை. எனவே குற்றவாளிகளை கண்டுபிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதேபோல் கொலை சம்பவம் நடந்த இடத்திற்கு ராமநாதபுரத்தில் இருந்து தேவசேனா என்ற மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. அந்த நாய் கொலை நடந்த இடத்தில் இருந்து சிறிது தூரம் ஓடி அங்கேயே நின்றுகொண்டது.
எனவே கொலையாளிகள் அங்கிருந்து வாகனங்கங்களின் மூலம் தப்பிச்சென்று இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.