கொட்டகையில் கட்டப்பட்டிருந்த 2 ஆடுகள் மர்ம விலங்கு கடித்து குதறிய நிலையில் உயிரிழந்து கிடந்தன. இதை கண்டு அதிர்ச்சியடைந்த சக்திவேல் இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலரிடம் புகார் மனு அளித்தார்.
சேலம் மாவட்டம் சங்ககிரி ஊராட்சி ஒன்றியம் காவேரிப்பட்டி ஊராட்சி பழனி ஆண்டவர் கோவில் தெருவை சேர்ந்தவர் சக்திவேல் (30), விவசாயம் செய்து வருவதுடன் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளையும் வளர்த்து வருகிறார்.
இவர் நேற்று மாலை வழக்கம்போல் ஆடு. மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து சென்று பின்னர் கொட்டகையில் கட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார். இன்று காலை வந்து பார்த்தபோது கொட்டகையில் கட்டப்பட்டிருந்த 2 ஆடுகள் மர்ம விலங்கு கடித்து குதறிய நிலையில் உயிரிழந்து கிடந்தன. இதை கண்டு அதிர்ச்சியடைந்த சக்திவேல் இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலரிடம் புகார் மனு அளித்தார்.
அந்த மனுவில் கால்நடைகளை வளர்த்து வாழ்வாதாரம் நடத்தி வரும் தனக்கு பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், ஆடுகள் உயிரிழந்ததற்கான காரணத்தை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுத்து இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
இதுகுறித்து சக்திவேல் கூறுகையில், காவேரிப்பட்டி பகுதியில் ஏராளமான விவசாயிகள் ஆடு, மாடுகளை வளர்த்து வருவதாகவும், கடந்த சில நாட்களாக மர்ம விலங்கு ஆடு, கோழிகளை தாக்கிக்கொன்று வருவதாகவும் தெரிவித்தார்.
மேலும் இது சிறுத்தையின் நடமாட்டமாக இருக்குமோ? என்ற அச்சம் நிலவுவதாக குறிப்பிட்ட அவர், வனத்துறையினர் அப்பகுதியில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி, மர்ம விலங்கு எது என்பதை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.